“எங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?!” - முதல்வர் அலுவலகத்தில் குமுறிய விவசாயிகள் | Farmers demonstrated to solve wages

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/10/2017)

கடைசி தொடர்பு:15:00 (05/10/2017)

“எங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?!” - முதல்வர் அலுவலகத்தில் குமுறிய விவசாயிகள்

விவசாயிகள்

றட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பெருங்குடிகளுக்காக பெய்த ‘பெருமழையாக', அவர்களின் பிரச்னைகளின் தீர்வுக்காக களமிறங்கியுள்ளனர், சென்னை சேப்பாக்கத்தில் திரண்ட, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர்.

'வறட்சிக்கான 150 நாள் வேலையை வழங்கிடு!

பேரூராட்சிப் பகுதிகளுக்கும் ஊரக வேலைத்திட்டத்தை விரிவுப்படுத்து!

வேலை நாள்களை 200 ஆகவும், தினக்கூலியை ரூ 400 ஆகவும் உயர்த்திடு! '- என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். கொளுத்தும் வெயிலில் விவசாயப் பெருமக்கள் திரண்டிருக்க, அவர்களிடம் பேசினோம்.   

"நாங்கல்லாம் குடிசையிலையும், ரோட்டோரமாகவும் வசிக்கும் சாதாரண ஜனங்க. ரொம்ப மோசமான நிலையில இருக்குற எங்க வாழ்க்கையில இந்த 100 நாள் வேலை திட்டம்தான் ஓரளவு ஆகாரத்துக்கு வழி செஞ்சது. ஆனாலும் அதிலும் எங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை. சரியா கூலி கிடைக்காது, இப்போ சரியா வேலையும் கிடைக்கிறதில்ல" என்று  குமுறினர் மக்கள்.

அங்கே திரண்டிருந்த பேரூராட்சிகளில் இருந்து வந்திருந்த விவசாயக் கூலிகள், "எங்களையும் இந்தத் திட்டத்தில் இணைச்சுக்கிட்டா எங்க பிரச்னையும் தீரும். வறுமையோடு கோரப்பிடியில இருக்கோம் " என புலம்பினர். விவசாயிகளைத் திரட்டி வந்த செங்கொடி ஏந்திய ஓர் தோழர், " அகில இந்திய அளவில் 22 கோடி பேர் கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளர்கள். தமிழ்நாட்டில் ஒரு கோடிப்பேர்.  தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் 17 சதவிகிதம் பேர். இவர்களின் நிலை மிக மோசமான நிலையில் இருக்கிறது" என்றார் வேதனையான குரலில். உணர்வுமயமாக போராட்டம் நடந்துகொண்டிருந்தது. 

விவசாயிகள்

நாம் அங்கிருந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசுவிடம், 'உங்கள் பிரச்னைகள் என்ன? என்றோம். "2006-ம் ஆண்டு 'மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்' கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை, வறட்சி பாதித்த இடங்களில் 150 நாள்கள் வேலை தினக்கூலி, ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வு அடிப்படையில் மத்திய அரசு நிர்ணயித்து வழங்க வேண்டும் என்பது உள்பட சட்டம் கொண்டு வரப்பட்டு அமலாக்கப்பட்டது. இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2016-17-க்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்தது.

இந்தத் திட்டத்தை மோடி அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்திலேயே ரத்துசெய்ய முடிவு செய்தது. இதை எதிர்த்துப்  போராடினோம். மோடி அரசு, இத்திட்டத்துக்கான  ஒதுக்கீடு முழுவதையும் மாநிலங்களுக்கு வழங்கவில்லை. 2016-17-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.13,000 கோடி பாக்கி வைத்தது. ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை தருவதற்குப் பதிலாக 3 ஆண்டுகளிலும் முறையே 40, 42, 44 நாள்கள்தான் வேலை கொடுக்கப்பட்டது. கூலிபாக்கி 6 மாதம், சில இடங்களில் ஒரு வருடம் கூட தராத நிலைமையும் இருந்தது, வறட்சி பாதித்த இடங்களில் 150 நாள்கள் வேலை வழங்கப்படவில்லை.

தமிழகத்துக்கான குறைந்தபட்ச கூலி 2014-15 க்கு ரூ.185, 2015-16 ரூ.203, 2016-17 ரூ.205 ஆகும். ஒரு வருடம் கூட முழு அளவு கூலி வழங்கப்படவில்லை. 50 லிருந்து 70 சதவிகிதம் என்கிற அளவுக்குதான் பெரும்பாலும் கொடுத்துள்ளனர். இதனால் விவசாயக் கூலிகள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல. இந்தவேலைத் திட்டத்தை சீரழித்து, சின்னாபின்னப்படுத்தி ஊழல், முறைகேடுகளுக்கு வழி வகுத்தனர். இந்த நிலையிலும் தொடர்ந்து மூன்றாண்டு கால வறட்சி சமயத்திலும் வேலை கொடுத்தனர். ஆனால், அதற்கு குறைந்தபட்ச கூலி கொடுக்காது மக்களை,   மோடி அரசாங்கமும், மாநில அ.தி.மு.க  அரசும் வஞ்சித்துள்ளது " என்றார். 

விவசாயிகள் போராட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறும்போது, “தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் 99 சதவிகிதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்களைக்கொண்ட பகுதிகளாகும்.  ஊர் பெரியதாக இருப்பதனால் பேரூராட்சி என்று கூறிவிட்டு, இதை நகர் பாலிகாவில் சேர்த்து வேலையில்லை என அரசு அறிவித்துவிட்டது. இங்கே 40 லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பேரூராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலைகள் வழங்க வேண்டுமென்று 10 வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

மத்திய அரசு இதுகுறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள மாநில அரசும் நாம் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. எனவேதான் மூன்று முக்கிய கோரிக்கைகளோடு முதல்வருக்கு மனு கொடுக்கும் இப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்” என்றார். “கூலி விவசாயப் பெருமக்களில் பெருமளவு பெண்கள் உள்ளனர். அவர்களின் பிரச்னையாகவும் இதைக் கவனம் செலுத்தவேண்டும். ஆனால்  பெரு முதலாளிகளுக்கு 2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் மத்திய மோடி அரசு, ஏழைக் கூலி விவசாயிகள் பிரச்னைகளுக்கு செவி சாய்க்க மறுக்கிறது” என குற்றம்சாட்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, "ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்களின் மனுக்களை முதல்வரிடம் வழங்க உள்ளோம்" என்றார்.

அதன்படி கோரிக்கை மனுக்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றனர் விவசாயப் பெருமக்கள். அங்கே முதல்வர் இல்லாததால், செயலாளரிடம் மனுக்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பினர். அப்போது "நாங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தும் முதல்வர் திருப்பதி சென்றுவிட்டார். விவசாயிகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு போல. எங்களைக் கவனிக்க யாருமேயில்லை.

சமீபத்தில் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய லட்சக்கணக்கானோர் வாக்களித்தனர். இதேபோல நடிகரை விமர்சித்துவிட்டால், அந்த நடிகரின் ரசிகர்கள் தேடிச் சென்று சண்டை போடுகின்றனர். ஆனால், உலகத்தையே இயக்குற விவசாயிகளை, உழைப்பைச் சொட்டச் சொட்டக் கொடுக்கும் விவசாயக் கூலிகள் பிரச்னையை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

அரசும் கண்டுகொள்வதில்லை. சினிமாக்காரர்களுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை எங்களுக்கும் கொடுங்க. நீங்கள் மெளனமாக இருப்பது விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதற்கு சமம்." என்றனர் மனம் நொந்து.

விவசாயிகளின் நியாயமான  கேள்விமுள்ளாக குத்துகிறது.


டிரெண்டிங் @ விகடன்