வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (05/10/2017)

கடைசி தொடர்பு:16:07 (05/10/2017)

மணல் கொள்ளையில் அரசியல் கட்சியினர்; கொந்தளிக்கும் அரியலூர் மக்கள்

"அரசியல் கட்சியினர் இரவு பகலாக அனுமதியில்லாமல் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடரும் மணல் கொள்ளையைக் கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம்" என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வெள்ளாற்றில் சட்டவிரோதமாகத் திருட்டு மணல் அள்ளும் வண்டிகளை மக்களே பலமுறை சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். வெள்ளாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது என்றும், யாரும் மணல் அள்ளக் கூடாது என்றும் பொது மக்களே காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதைமீறி மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ஆண்டிமடம் போலீஸார் ரோந்து பணியின்போது வந்த 4 மாட்டு வண்டிகளை மறித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் வெள்ளாற்றிலிருந்து அனுமதியில்லாமல் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை மாடுகளுடன் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடர்பாக செல்வராஜ், ஜேம்ஸ், மதலைதாஸ், ஆரோக்கியதாஸ் ஆகிய 4 பேரைக் கைதுசெய்து ஆண்டிமடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனா். 

இது குறித்து சமூக ஆர்வலர் குமார் என்பவரிடம் பேசினோம். "இப்பகுதியில் அரசியல் கட்சியினர் இரவு பகலாக அனுமதியில்லாமல் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள்மீது காவல்துறையினரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்களாகிய நாங்கள்தான் மணல் அள்ளும் வண்டிகளை சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இன்று வரையிலும் இரவு நேரத்தில் லாரியில் மணல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்காமல் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களைப் பிடித்திருப்பது வேதனையாக இருக்கிறது. மாட்டு வண்டியில் மணல் எடுப்பதை நியாயப்படுத்தவில்லை. காவலர்களும் அதிகாரிகளும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து பொதுப்பணிதுறை அலுவலகத்தை முற்றுகையிடப்போகிறோம்" என்றார்.

             

இதனிடையே, "தா.பழூா் பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி ரசீது கொடுத்து இயங்குவதுபோல் வெள்ளாற்றிலும் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்க வேண்டும். ஆட்கள் மூலம் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காது என மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தெரிவித்தனா்.