வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (05/10/2017)

கடைசி தொடர்பு:16:25 (05/10/2017)

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பணிகளுக்காக, அணைகளின் நீர் இருப்பைக் கவனத்தில் கொண்டு பாபநாசம் அணையிலிருந்து 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாபநாசம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஜூன் மாதம் தொடங்கும் தென் மேற்குப் பருவமழை மூலமாக கார் சாகுபடியையும் அக்டோபரில் தொடங்கும் வட கிழக்குப் பருவமழை மூலமாக பிசான சாகுபடியும் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பாபநாசம் அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர் விவசாய நிலங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 46, 107 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக வட கிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் பிசான சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை வரலாறு காணாத அளவுக்கு ஏமாற்றமளித்தது. இதனால் குடிநீர் தேவையைக்கூட சமாளிக்க முடியாத நிலைமை உருவானது. அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாத நிலையில், குடிநீர் தேவைக்காக கடந்த ஆண்டு 200 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வழியில்லாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். 

அணை திறப்பு

இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது. அணைக்கு 631 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 87 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 48 அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், பிசான நெல் சாகுபடிக்கு உதவும் வகையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர் இருப்பைக் கவனத்தில் கொண்டு, பிசான நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ-வான முருகையா பாண்டியன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். 

அணை

பாபநாசம் அணையிலிருந்து 1400 கன அடி தண்ணீர் விவசாயத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் செய்ய வசதியாக 178 நாள்களுக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.