சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்பு..! | Sasikala expected to get parole very soon

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (05/10/2017)

கடைசி தொடர்பு:23:58 (05/10/2017)

சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்பு..!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நாளை அவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

சசிகலா

சசிகலா கணவர் நடராசன் உடல்நிலை பாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதையடுத்து தற்போது அவருக்கு உறுப்பு  மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நடராசனைப் பார்ப்பதற்காக 15 நாள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார் சசிகலா. முதலில் தாக்கல் செய்த பரோல் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறைக் கண்காணிப்பாளரிடம் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார் சசிகலா 

இந்நிலையில், கர்நாடகா சிறைத்துறை சில ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இன்று அந்த ஆவணங்கள் சென்னையில் சரிபார்க்கப்பட்ட பிறகு, கர்நாடகச் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன், இன்று திடீரென்று பெங்களூரு புறப்பட்டார். பெங்களூரு சென்று அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் சசிகலா சென்னையில் தங்கும் இடம் பற்றி ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் நாளை சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படலாம் எனச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெங்குளூரு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணியின் மாநிலச் செயலாளர் புகழேந்தி, 'சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று விடுமுறை என்பதால் பரிசீலிக்கப்பட்டு நாளை சசிகலாவிற்கு பரோல் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.