Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கேலிக்கூத்தான அமைச்சர்களுக்குத்தான் கேளிக்கை வரி விதிக்க வேண்டும்!” - மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

Chennai: 

“கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி 6-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடமாட்டோம்' என்று அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். 'நாடு முழுக்க ஒரே வரி' என்ற கோஷத்தோடு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாகத் திரைத்துறையில் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசின் சார்பில், 10 விழுக்காடு கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இந்த இருமுனை வரி விதிப்பை எதிர்த்தும், கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரியும் தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கோரிக்கை வைத்துவந்தனர்.

இந்நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்காக தமிழக அமைச்சருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது'' என்று துணிச்சலாக தனது கருத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில், தற்போது கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் முடிவு குறித்து மன்சூர் அலிகான் கருத்தை அறிவதற்காகப் பேசினோம். அவரது கருத்துகள் அப்படியே இங்கே. 

“தயாரிப்பாளர் சங்கக் குழு உறுப்பினராக நானும் விஷாலும் ஆரம்பத்திலேயே இந்த வரிவிதிப்புகளை எதிர்த்துத் திரைத்துறை சார்பில், பணி நிறுத்தம் செய்ய முடிவெடுத்தோம். அதாவது, தமிழக அரசின் இந்தக் கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்திவைப்போம் என்ற முடிவை எடுத்தோம். ஆனால், அந்த சமயத்தில், சிம்பு, அருள்நிதி உள்ளிட்ட சில நடிகர்களின் படங்கள் வெளியாகவிருந்தன. எனவே, அவர்கள் 'புதுப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தும் போராட்டம் இப்போது வேண்டாம்' என்று சங்கத்தோடு பேசி போராட்டத்தை நடத்தவிடாமல் செய்துவிட்டனர். அதேநேரம் தாணு, அபிராமி ராமநாதன் போன்றோர் சேர்ந்து புதிதாக 'தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை'யை ஆரம்பித்திருந்ததால், அவர்களும் அப்போது போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒத்துழைக்கவும் இல்லை. ஆனால், அவர்களே தியேட்டர்களை மூடி ஸ்ட்ரைக் பண்ணினார்கள். ஆனால், அந்த முயற்சிக்கும் அரசு ஆப்படித்துவிட்டதெல்லாம் உங்களுக்கே தெரியும். 

எடப்பாடி - மோடி

‘நாடு முழுவதும் ஒரே வரி’ என்று சொல்லி ஜி.எஸ்.டி வரியை விதித்துவிட்டு இப்போது மாநில அரசும் தனியாக 10 விழுக்காடு கேளிக்கை வரி விதிப்பதென்பது தேவையற்றது. ஒருவருக்குத்தான் தாலி கட்ட முடியும்; ரெண்டு பேருக்கு எப்படித் தாலி கட்ட முடியும்? 
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தமிழ்நாடு அரசே கேலிக்குரியதாக இருக்கிறது. இன்றைக்குத் தமிழக அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கிற கேலிக்கூத்துகளுக்கு நாம்தான் அவர்கள்மீது கேளிக்கை வரி போட வேண்டும். 

உதாரணத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே எடுத்துக்கொள்ளுங்களேன்.... ‘சுதா... நீங்க யாரும்மா... பரதநாட்டியமா?' என்றெல்லாம் கேட்டு கர்நாடகப் பாடகி சுதாரகுநாதன் போன்ற ஒரு கலைஞரை அவமானப்படுத்துகிறார். ஒரு துறையில் உள்ள சாதனை படைத்த மூத்த கலைஞரைப் பற்றிக்கூட சரிவரத் தெரிந்துகொள்ளாமல், தப்புத்தப்பாக பெயர் சொல்லி மேடையிலேயே அவமானப்படுத்துகிறார். கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருக்கிறதா? அடுத்தவர்களை மதிக்கத் தெரியவேணாமா? அடுத்த நாளே ஒல்லியாகணும்னா சைவ உணவு சாப்பிடுங்கள்; உடம்பு இளைத்துவிடும் என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கேலிக்கூத்துகள்... இதற்குத்தான் வரி போடவேண்டும்.

மன்சூர் அலிகான்

இன்றைக்குத் தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருந்தால்தானே, '10 விழுக்காடு வரியை எடுத்துவிடுங்கள்' என்று சொல்லமுடியும். அரசு என்ற ஒன்று இங்கே இருக்கிறதா? அப்படியிருந்தால் அதை யார் நடத்துகிறார்கள் என்றாவது தெரிகிறதா? சரி விடுங்கள்.... தமிழக அரசை யார் நடத்துகிறார்கள் என்று இன்றைக்கு உலகத்துக்கே தெரியும்.

மேற்கு வங்காளத்தில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பாதித் தொகையை திரைத்துறைக்கே திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். இதே வரிசையில் தெலங்கானா, ஆந்திராவும் செயல்பட்டுவருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் பன்முனை வரியாக இருக்கிறது. நடிகர்கள் நாங்கள் டி.டி.எஸ் வரி கட்டுகிறோம். வருமான வரி கட்டுகிறோம். இதுதவிர விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என எல்லோரிடமும் தனித்தனியே வரி வசூலிக்கப்படுகிறது. இப்படி ஒரே துறையில் 10 விதமாக வரி வசூலிப்பு நடந்தால், நாங்கள் எப்படிப் பிழைப்பது? அதனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் சுமுகமான முடிவெடுத்து கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை'' என்று விளக்கமாகக் கூறி முடித்தார் நடிகர் மன்சூர் அலிகான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement