Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெரியார் போற்றிய வள்ளலாரின் பிறந்த நாள் இன்று!

கடவுள் மறுப்பு என்ற ஆயுதம் கொண்டே எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர் பெரியார். சாதி வேறுபாடுகள் ஒழிய மதம் ஒழிந்தே ஆக வேண்டும் என்று களமாடியவர் பெரியார். இதெல்லாம் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அப்படிப்பட்ட பெரியாரே வள்ளலார் சமயக்கருத்துகளைப் போற்றிப் புகழ்ந்து அந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு இருக்கிறார் தெரியுமா? 

வள்ளலார்

1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்தார். இந்த நூலை வியந்து அடிக்கடி விளம்பரமும் செய்தார் பெரியார். கடவுளை மறுத்த பெரியார் அப்படி எதைக்கண்டு வியந்து திருவருட்பாவில் ஆறாம் திருமுறையை வெளியிட்டார் என்று நீங்கள் எண்ணலாம். 

பெரியார்

ஆரம்ப திருவருட்பா பாடல்களில் கடவுளை எண்ணி பாடிய வள்ளலார், பின்னர் மாறுதலடைந்து ஒளியை மட்டுமே வணங்கும் நிலைக்கு வந்தபிறகு எழுதியவைதாம் இந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள். இதில் பெரும்பாலும் சாதி, வர்ணாசிரம முறைகளைக் கண்டித்தே எழுதினார். மேலோர், கீழோர் என்ற பாகுபாடே இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க நெறியை போதிக்க முற்பட்டார் வள்ளலார். உருவ வழிபாட்டை முற்றிலும் விலக்கி, ஆன்ம ஜோதியே கடவுள் என்று விளக்கினார் வள்ளலார். ஆண், பெண் வேறுபாடின்றி கல்வியைக் கொடுக்க வலியுறுத்தினார். சமயத்தின் பேரால் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம்.  சமய நூல்களைவிட திருக்குறளைப் படிப்பது சாலச் சிறந்தது என்றார் வள்ளலார்.

எல்லோருக்கும் படிப்பு அவசியம் என்று ஊர்தோறும் சென்று பரப்பினார். போலி சமயவாதிகளைக் கண்டித்தார். இப்படி எல்லா வகையிலும் பெரியாருக்கு முன்னோடியாக வள்ளலார் இருந்தார். ஆன்மிகத் தலைவராக, குருவாக வள்ளலார் இருந்தாலும், அவரது மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புரட்சிகர கருத்துகள் பெரியாரை அதிகம் கவர்ந்தன. அதனாலேயே வள்ளலாரின் திருவருட்பாவை வெளியிடவும் வைத்தது எனலாம். மூடநம்பிக்கைகளை மிரண்டோடச் செய்த ஆன்மிக வழிகாட்டி வள்ளலாரின் பிறந்த நாள் இன்று. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement