வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (06/10/2017)

கடைசி தொடர்பு:21:17 (07/10/2017)

பெற்றோரைவிட்டு வெளியூர் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் இளம் பெண் பேசுகிறேன்! 

 பெண்

சொந்த ஊரைவிட்டுப் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியூரில் தங்கியிருக்கறவங்க நம்மில் பலர். இருக்கவே பிடிக்கலைன்னாலும், சம்பாதிக்கணுமே... வீட்டுக்குப் பணம் அனுப்பணுமே என பின்மண்டையில் தட்டி ஞாபகப்படுத்தி விரட்டும். வீட்டினரோடு ரொம்பவும் அன்போடு இருக்கும் பெண்களுக்கு ஹாஸ்டலில் தங்கியிருக்கும்போது வீட்டு நினைவுகள் வராத நேரமே இருக்காது.

ஊரில் இருக்கிறப்போ, நிறைய தடவை 'சாப்பிட வாடி'னு அம்மா கூப்பிடுவாங்க. அதுதான் அம்மாவின் அக்கறை. 'உனக்கு வேற வேலை இல்லையா? நான்தான் வரேன்னு சொல்றேன்ல... சும்மா தொண தொணத்துக்கிட்டு'னு எரிஞ்சு விழுவோம். அப்படியொண்ணும் வெட்டி முறிச்சுட்டு இருக்க மாட்டோம். மொபைலை நோண்டுக்கிட்டோ, ஃப்ரெண்ஸோடு பேசிட்டோ இருப்போம். நமக்குத் தொணதொணப்பா தெரியும். ஆனால், இப்போ யோசிச்சுப் பார்த்தால் அழுகையா வருது. ஹாஸ்டல்ல மணி அடிச்சதும் சாப்பாட்டுக்கு ஓடணும். யாரும் கொஞ்சிக் கூப்பிட மாட்டாங்க. அந்த நேரத்தை விட்டுட்டா அப்புறம் புளிச்ச மாவு, ஊசிப்போன சட்னி கிடைக்கும் கடையில்தான் திங்கணும். 

வீட்டுல இருக்கிறப்போ எதுக்காக கத்துறோம்னு தெரியாமலேயே அம்மாவை ஏதாச்சும் சொல்லிட்டே இருப்போம். உதாரணத்துக்கு... பாத்ரூம்ல தண்ணி வரலைன்னா, டிரஸ்ஸை துவைக்கலைன்னா.... துவைச்சதை அயர்ன் பண்ணி வைக்கலைன்னா... அயர்ன் பண்ணினதை சரியான இடத்தில் வைக்கலைன்னா... எல்லாமே அம்மா வேலைதான் என்கிற மாதிரி எரிஞ்சு விழுவோம். ஆனால், ஹாஸ்டல்ல எத்தனை நாள் கிடந்தாலும் நம்ம டிரஸ்ஸை நாமதான் துவைக்கணும். தண்ணி வரலைன்னா வாலைச் சுருட்டிக்கிட்டு வரிசையில் நின்னு பிடிச்சுதான் குளிக்கணும்.

ஹாஸ்டல்

ஹாஸ்டல் லைஃப்ல புது புது அனுபவம் கிடைக்கும் என வீட்டைவிட்டு வந்திருக்கும் நமக்கு ஒரே ஆறுதல், நட்புகள்தான். ஒரே தட்டுல சாப்பிட்டு, சின்னச் சின்னதா சண்டைப் போட்டுக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுக்கிட்டு, தூக்கம் வர்ற வரைக்கும் பேசிக்கிட்டு, பாசங்களைப் பற்றி பரிமாறிக்கிட்டு என இருப்போம். காலையில் அவ்வளவு சீக்கிரம் யாரும் எழுந்திருக்க மாட்டாங்க. எழுந்து ரெடியாகிட்ட நம்மால சும்மா இருக்க முடியுமா? கண் மை, லிப்ஸ்டிக் என எதையாவது எடுத்து, தூங்குமூஞ்சுகளின் முகம் முழுக்க கோலம் போட்டுட்டு கிளம்பிடுவோம். போறப்போ, போட்டோ பிடிச்சு வாட்ஸாப் குரூப்ல போட்டுவிட்டால், அன்னைக்கு முழுக்க அவங்கதான் நமக்கு ஃபுல் மீல்ஸ். ஆனால், கண் முழிச்சதும் அந்தக் கோலக்காரி, போன் போட்டு நம்மளை கூவம் கணக்கில் திட்டறதையும் சந்தோஷமா வாங்கிக்கணும். 

ஒரு கட்டத்துல அவங்களும் ஊருக்கு, வேற ஹாஸ்டலுக்கு என இடம் மாறிடும்போது, மறுபடியும் வீட்டு ஞாபகம் வந்து கொல்லும். 'எப்போடா சேர்ந்த மாதிரி ரெண்டு நாள் லீவு வரும்... இன்னொரு நாள் எக்ஸ்ட்ரா லீவு எடுத்துக்கிட்டு ஓடிப்போய் அம்மா மடியில விழுவோம்'னு தோணும். ஆனால், எக்ஸ்ட்ரா லீவுக்கு மேனேஜர் முன்னாடி, “அடிமை வந்திருக்கிறேன் பிரபு” என்கிற மாதிரி நிற்கணும். வீட்டுல அப்பாவோ, அம்மாவோ சின்னதா ஒரு வார்த்தை சொல்லிட்டால், வானத்துக்கும் பூமிக்கும் குதிப்போம். முறுக்கலோடு சாப்பிட மாட்டோம். ஆனால், ஒருநாள் லீவுக்கு மேனஜர், ‘கன்னா பின்னா’ எனப் பேசறதை அமைதியா, திருப்பதி லட்டு வாங்கற மாதிரி வாங்கிப்போம். எக்ஸ்ட்ரா லீவையும் சேர்த்துதான். 

லீவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற டவுட்டுலேயே ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணியிருக்க மாட்டோம். கடைசியில் அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷனுக்கோ, பஸ் ஸ்டாண்டுக்கோ போனால், நம்மளை மாதிரி நானூறு பேர் நிற்பாங்க. கண்டக்டரில் ஆரம்பிச்சு, பக்கத்து சீட்டுக்காரன் வரைக்கும் 'அண்ணா... அண்ணா....' எனக் கெஞ்சி, இடத்தைப் பிடிச்சு ஊருக்குப் போய் சேருவோம்.

விடியற்காலையில ஊருக்குப்போய்ச் சேர்ந்து வீட்டுக் கதவைத் தட்டறதுக்கு முன்னாடியே, நம்மையே எதிர்பார்த்து கதவைத் திறந்து அம்மா ஒரு புன்னகை வீசுவாங்க பாருங்க... அடடா... அந்தப் புன்னகையில் நம்மோட அத்தனை வேதனையும் காணாமல் மறந்துபோகும். வேதனை மட்டுமா? நம்ம திமிரு... பெரிய படிப்பு... ஆபீஸர் கெத்து... எல்லாமே!


டிரெண்டிங் @ விகடன்