சிவகங்கையில் ஆட்சியர் தலைமையில் மாணவிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி..!

சிவகங்கை மாவட்ட புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் லதா தலைமையில் பள்ளி மாணவிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழக சுகாதாரத்துறை சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (5.10.2017) புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியில், “நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருள்களைப் போடமாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருள்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீடடில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒருமுறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன். இதன்மூலம் ஏடிஸ் கொசுப் புழு வளராமல் தடுப்பேன். நான் கற்றுக் கொண்டவற்றை அண்டை, அயலார்க்கும் கற்றுக்கொடுத்து டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பார்த்துக் கொள்வேன். தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்துக் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சாந்திமலர், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) டாக்டர்.விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர். யசோதாமணி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மரியாதெரசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!