வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (05/10/2017)

கடைசி தொடர்பு:15:07 (09/07/2018)

தேவர் குருபூஜை முன்னிட்டு பசும்பொன்னில் ஏ.டி.ஜி.பி ஆய்வு

அக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜையை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஏ.டி.ஜி.பி விஜயகுமார் ஆய்வுமேற்கொண்டார்.

குருபூஜை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி பசும்பொன்னில் ஆய்வு


அக்டோபர்  28, 29, 30 ஆகிய தினங்களில் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 110-வது ஜயந்தி விழா மற்றும்  55-வது குருபூஜை விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகக் காவல் துறை ஏ.டி.ஜி.பி விஜயகுமார் இன்று பசும்பொன் வந்திருந்தார். அவர், தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் மற்றும் டி.ஐ.ஜி-க்கள், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களுடனும், தேவர் நினைவிடத்தைப் பராமரித்து வரும் காந்திமதி அம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.