வெளியிடப்பட்ட நேரம்: 00:55 (06/10/2017)

கடைசி தொடர்பு:08:55 (06/10/2017)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா : இந்த ஆண்டு 550 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு கூடுதலாக 550 சிறப்புப் பேருந்துகளும்,  2 சிறப்பு ரயில்களும் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி ஆலோசனைக் கூட்டம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு சஷ்டித் திருவிழா வரும் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. 26-ம் தேதி மாலை 4 மணிக்கு கடற்கரையில் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சணக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள். இந்தத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் , மாவட்ட எஸ்.பி, மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெயா, ‘’இந்த மாதம் நடக்க உள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்காகத் திருக்கோயில் வளாகத்தில் ஆங்காங்கே உள்ள குடிநீர் தொட்டிகள் அல்லாமல், கூடுதலாகக் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், சுகாதார வசதிகள் செய்யப்படும். பக்தர்களின் மருத்துவப் பரிசோதனைக்காக கோயில் வளாகத்தில் இரண்டு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழிக்கிணறு பகுதி ஆகிய இடங்களில் தயார் நிலையில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. கடற்கரைப் பகுதியில், பலமான தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு அனைத்து பக்தர்களும் சூரசம்ஹாரத்தைக் காணும் வகையில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட உள்ளன. திருக்கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி, வாகன நிறுத்தம் எனப் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 550 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க