வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/10/2017)

கடைசி தொடர்பு:08:40 (06/10/2017)

கோவையில் ஒரே நாளில் இரண்டு பேர் டெங்குவுக்கு பலி!

கோவை மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dengue


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவருகிறது. ஆனால், டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் தொடர்ந்து நடந்துவருகின்றன. 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுவதும், இன்று டெங்கு தடுப்பு விழிப்பு உணர்வு தினமாக அரசு கொண்டாடி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இரும்பறை கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவருக்கு வயது 25. கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காததால், காவேரி இன்று உயிரிழந்தார். அவர், மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும் டெங்குதான் அவரது உயிரைப் பறித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்தி முந்தா. 18 வயதான இவர், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். இதனிடையே, டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் இன்று உயிரிழந்தார்.