வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (06/10/2017)

கடைசி தொடர்பு:08:29 (06/10/2017)

திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்குத் திரும்பின

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்க, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பத்பநாபபுரம் அரண்மனை தேவராகட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள், கடந்த மாதம் 18-ம் தேதி திருவனந்தபுரம் சென்றன. பத்பநாபபுரம் அரண்மனையிலிருந்து மன்னரின் உடைவாளும் கொண்டுசெல்லப்பட்டது. சுவாமி விக்ரகங்கள் செல்லும் பாதைகளில் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்துகொண்டு,ஒருநாள் நல்விருப்புக்குப் பிறகு, 2-ம் தேதி அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன.

2-ம் தேதி இரவு, நெய்யாற்றின் கரையிலும் 3-ம் தேதி குழித்துறையிலும் சுவாமி விக்ரகங்கள் ஓய்வு எடுத்த பின், நேற்று காலை  குழித்துறையிலிருந்து விக்ரகங்கள் பத்மநாபபுரம் புறப்பட்டன. இந்த ஊர்வலம், நேற்று மாலை பத்பநாபபுரம் வந்தடைந்தது. அங்கிருந்து வேளிமலை முருகன் குமார கோவிலுக்கும், முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்துக்கும் பல்லக்கில் புறப்பட்டன. பின்னர்  சரஸ்வதி, அரண்மனை தேவாரக்கட்டு சென்றடைந்தது. முன்னுதித்த நங்கை அம்மன் சிலை இன்று சுசீந்திரம் வந்தடைந்தது. இதற்கு,  தமிழகம் மற்றும் கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பிறகு, ரதவீதியைச் சுற்றிவந்து திருஆராட்டு நடந்தது. அதன்பின், உட்பிரகாரம் கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது, பக்தர்கள் திரண்டு முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க