அழிந்து வரும் உயிரினங்கள்குறித்து கோவையில் புகைப்படக் கண்காட்சி

'வன உயிரின வார விழா'வை முன்னிட்டு கோவையில் உள்ள வனவியல் பயிற்சிக் கழகத்தில், புகைப்படக் கண்காட்சி தொடங்கியது.

கண்காட்சியின் போது

நாடு முழுவதும், இந்த வாரத்தை வன உயிரின வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் வன உயிரின வாரமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இதையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில், கடந்த திங்கள்கிழமை முதல் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடந்துவந்தன. இந்நிலையில், வன உயிரினங்கள்குறித்த புகைப்படக் கண்காட்சி, தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் இன்று தொடங்கியது. இதை, தமிழ்நாடு வன உயர்பயிற்சியக கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் யோகேஷ்திவேதி தொடங்கிவைத்தார். இப்போது தொடங்கியுள்ள புகைப்படக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை நடக்கிறது. தினசரி, காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல், பொது மக்களும் இந்தக் கண்காட்சியைக் காணலாம். மேலும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டியும், நாளை புகைப்படப் போட்டியும் நடைபெற உள்ளன.

இதுகுறித்து இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் ஜலாலுதீனிடம் கேட்டபோது, "இயற்கையைப் பாதுகாப்பதற்காக, 'வன உயிரின வார விழா' கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் 350-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம், மக்களிடையே வன
உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்த முடியும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!