வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (06/10/2017)

கடைசி தொடர்பு:12:49 (06/10/2017)

சவலைப்பிள்ளையாக மாறும் அம்மா உணவகங்கள்! ‘அம்மா’ வழிநடக்கும் அரசு அரவணைக்குமா?

அம்மா உணவகம்

‘அம்மா உணவகம்’ என்ற மலிவு விலை உணவகம்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை தமிழகத்தின் பக்கம் திருப்பியவர் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா. “அடிதட்டு மக்களின் பசியைப் போக்கவே இந்த மகத்தான திட்டம்” என்றார் ஜெயலலிதா, அதன் தொடக்கவிழாவில். ஜெயலலிதா இருந்தவரை துடிப்போடு செயல்பட்ட இந்த அம்மா உணவகங்களின் நிலை இப்போது சவலைப்பிள்ளைபோலத் தவித்துக்கொண்டிருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ‘மலிவு விலை உணவகம்’ என்ற பெயரில் 2013-ம் ஆண்டு சென்னை சாந்தோமில் முதல் முறையாக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் இந்த அம்மா உணவகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், முதல்தினமே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. காரணம், அந்த உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளின் தரமும் சுவையுமே காரணமாக அமைந்தது. அந்த உணவகங்களில் காலை நேரத்தில் இட்லியும், பொங்கலும், மதிய நேரத்தில் கொத்துமல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு சாதங்களும் வழங்கப்பட்டன.

சென்னை நகரில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு, ஒரு அம்மா உணவகத்தோடு... தமிழகத்தின் மாநகராட்சிகளில் சிலவற்றிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இந்த உணவகங்களில் காலையில் ஒரு ரூபாய்க்கு ஓர் இட்லி, ரூ.5-க்குப் பொங்கல், மதியத்தில் சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை மற்றும் கீரை சாதங்கள் தலா ரூ.5, தயிர்சாதம் ரூ.3 என விலை நிர்ணயம் செய்யபட்டு இருந்தது. அதன்பிறகு, இரவு உணவாகச் சப்பாத்தியும் பட்டியலில் இணைக்கப்பட்டது. இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நகராட்சி அம்மா உணவகம்

முதலில் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமே, செயல்பட்ட அம்மா உணவகங்களுக்கு மக்களின் வரவேற்பு அதிகம் இருந்ததால், அதை நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என்று இருந்த அம்மா உணவகங்கள், வார்டுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் விரிவுபடுத்தப்பட்டன. மேலும், அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று  முடிவு எடுக்கப்பட்டு,  சென்னையில் செயல்பட்ட 200 அம்மா உணவகங்கள் 417-ஆக விரிவுபடுத்தப்பட்டன. சென்னையில் செயல்பட்ட அம்மா உணவகங்களுக்கான செலவுகள் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வோர் அம்மா உணவகங்களும், அந்தப் பகுதியின் துப்புரவு ஆய்வாளர் கண்காணிப்பில் செயல்பட்டு வந்தது. அம்மா உணவகங்களில், துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் தூய்மை மற்றும் உணவின் தரமும், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் வரவு- செலவுகளும் ஆரம்பத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தன. உணவகத்துக்குத் தேவையான பொருள்கள் அரசு குடோன்கள் மூலமே பெறப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஓர் ஆண்டாக அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக, உணவுகள் தரமில்லாமல் போவதுடன் வியாபாரம் இல்லாத நிலையில் பல அம்மா உணவகங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. 
அம்மா உணவகங்களின் நிலை குறித்து சென்னை மாநகராட்சியில் விசாரித்தபோது வந்த தகவல்கள் பகீர் ரகமாக இருந்தது. “அம்மா உணவகங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு பார்த்துத்தான் இரண்டு மடங்காக அம்மா உணவகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. மேயரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த உணவகங்கள் செயல்பட்டதால், உணவுகளும் தரத்துடனே வழங்கப்பட்டது. ஒவ்வோர் உணவகத்துக்கும் தேவையான பொருள்கள் மண்டல வாரியாக வழங்கப்பட்டுவிடும்.

தினமும் அந்தந்த உணவகங்களுக்கே வேனில் பொருள்கள் சென்று வழங்கப்பட்டு வந்தன. இரவு உணவாகச் சப்பாத்தி அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்தந்த உணவகங்களே சப்பாத்தி தயாரிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாகச் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், அதில் தயார் செய்யப்பட்ட சப்பாத்திகள் தரம் இல்லாமல் போனதால், அந்த இயந்திரங்களுக்கு  மூடுவிழா நடத்தப்பட்டது. இப்போது அவுட்சோர்ஸிங் முறையில் சப்பாத்தி பெறப்பட்டு வருகிறது. 

உள்ளாட்சி நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தபோது, உணவகங்களுக்குத் தேவையான பணம் தினமும் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்தது.  ஆனால், கடந்த ஓர் ஆண்டாகப் பணம் வருவதே நின்றுபோய் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி நிர்வாகம் செயல்படுவதால், அம்மா உணவகங்களுக்குத் தேவையான பொருள்களும் முழுமையாகச் செல்வதில்லை. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பெல்லாம் இரவு நேரத்தில் மீதமாகும் சப்பாத்திகளைத் துப்பரவு ஆய்வாளர் பணத்தைக் கொடுத்து பெற்றுக்கொள்வார். இப்போது மீதமாகும் சப்பாத்திகளை அலுவலகத்துக்கே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். உணவும் தரமில்லாமல் போய்விட்டது” என்கிறார்கள்.

அம்மா உணவகம் திறப்பு விழா

அம்மா உணவகத்தின் செயல்பாடுகளே தற்போது முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அமுதம் அங்காடிகள் மூலம் உணவுக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டுவந்தன. ஆனால், இப்போது பொருள்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பல அம்மா உணவகங்களில் பராமரிப்புப் பணிகளே இல்லை. பொருள்கள் வாங்குவதற்கான பணமும் இப்போது அதிகாரிகள் தரப்பில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. முன்னர் அந்தந்த பகுதியின் வார்டு உறுப்பினர்கள் அம்மா உணவகத்தைக் கண்காணித்து வந்தனர். இப்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் சென்னையில் கட்டப்பட்ட அம்மா உணவகங்களின் கட்டட ஒப்பந்ததாரர்களுக்குப் பணம்கூட முழுமையாகச் செட்டில் செய்யப்படவில்லை. இதனால் பல அம்மா உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டன. இதேபோல் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்ட உணவுகளும் தரமில்லாமல் இருப்பதால் வியாபாரமும் படுத்துவிட்டது.

சவலைப்பிள்ளையாக மாறிவிட்ட அம்மா உணவகங்களுக்கு ஊட்டம் கொடுக்கவேண்டியது அம்மா வழியில் நடைபெறும் ஆட்சியாளர்கள்தான். 

அம்மா உணவகங்களுக்கு உயிர்கொடுக்குமா அம்மாவின் அரசு?


டிரெண்டிங் @ விகடன்