வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (06/10/2017)

கடைசி தொடர்பு:10:31 (07/10/2017)

புதிய ஆளுநராகப் பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் ஏற்றார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 


காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர், நீண்ட காலமாகப் பொறுப்பு ஆளுநராக நீடித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பன்வாரிலால் புரோஹித்தைத் தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசு அறிவித்தது. அதனால், வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டார்.

பன்வாரிலால் புரோஹித், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவிப்பிரமாணம் எடுத்து, தமிழக ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலாலுக்கு சால்வை அணிவித்து மரியாதைசெலுத்தினார். டி.டி.வி.தினகரனும் புதிய ஆளுநருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.