வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (06/10/2017)

கடைசி தொடர்பு:12:12 (06/10/2017)

குஷ்பு-க்கு எதிராக பொதுக்குழுவில் கொந்தளித்த கராத்தே தியாகராஜன்!

சென்னையில் நடந்துவரும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்புமீது கராத்தே தியாகராஜன் சரமாரியாகப் புகார் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க-விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு-க்கு அகில இந்திய செய்தித்தொடர்பாளர் பதவியைக் கொடுத்தது கட்சி மேலிடம். இதனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பலை வீசியது. இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், குஷ்புவை பொதுக்குழு உறுப்பினராகச் சேர்த்ததற்கு, கராத்தே தியாகராஜன் மற்றும் தென் சென்னை மாவட்ட மகளிர் அணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக குஷ்பு விதிமீறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஷ்பு, பொதுக்குழு உறுப்பினர்தான்; அவர் அடையாள அட்டையை வைத்திருக்கிறார். ரூ.5 செலுத்தி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருநாவுக்கரசர், சிதம்பரம் உள்ளிட்டவர்கள்கூட ரூ.5 செலுத்தி உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களைச் சேர்த்ததில் விதிகள் பின்பற்றப்படவில்லை. முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை" என்று குற்றம் சாட்டினார்.