பூம் பூம் மாடும் ஹொய் சி மீன்களும்... சென்னையில் கும்பகோணம் கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி! | kumbakonam arts collage students paintings gallery in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (06/10/2017)

கடைசி தொடர்பு:16:04 (06/10/2017)

பூம் பூம் மாடும் ஹொய் சி மீன்களும்... சென்னையில் கும்பகோணம் கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி!

கலைத்திறனையும் வேலைப்பாட்டையும் சென்னையில் காட்சிப்படுத்தியுள்ளனர் கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள் 24 பேர். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் அக்டோபர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது இந்தத் தூரிகைக் காட்சி. நீர் வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், அக்கர்லிக் ஓவியம் எனப் பல்வேறு வகையிலான ஓவியங்களை அதில் காட்சிப்படுத்தியுள்ளனர். வாழ்க்கையின் இயல்புகளை, உழைக்கும் வர்க்கத்தின் உண்மை நிலையை, இயற்கையால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய அற்புத நிகழ்வுகளையும் தூரிகையின் மூலம் துல்லியமாக வரைந்துள்ளனர், கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள். இப்படிப்பட்ட ஓவியக் கண்காட்சியை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் நடத்துகிறார்கள்.

ஓவியக்கண்காட்சி

இதற்காக, 24 மாணவர்களும் பேராசிரியர் வில்வநாதன் தலைமையில் சென்னை வந்துள்ளனர். கண்காட்சியில் மொத்தம் 70 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்பது பெண்கள் உள்பட 24 மாணவர்களின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான முறையில் வரையப்பட்டுள்ளன. நுழைந்தவுடன் மாணவர் நவநீதகிருஷ்ணனின் நீர் வண்ண ஓவியம் இருந்தது. போர்ட்ரெய்ட் வகையிலான படம் ஒன்றை நீர் வண்ணம் குழைத்து வரைந்திருந்தார். சேவல் படங்களைத் தூக்கிக்கொடுக்கும் வெம்மை மிகுந்த எண்ணெய் வண்ண ஓவியத்தில் பிரமிக்கவைத்தார் மாணவர் ஸ்ரீஹரி. மாணவி கார்த்திகா, குருவிகளின் ஒற்றுமை உணர்வையும், ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடிய பக்குவத்தை, பரவசத்தை கோட்டோவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தார். எண்ணெய் வண்ண ஓவியங்களில் தவிட்டுக் குருவிகளும், தூக்கனாம் குருவிகளும், குறிப்பாக சிட்டுக்குருவிகளும் பறந்து செல்லும் வேகத்தைக்கூட தன் கலைத்திறன் மூலம் கண்களுக்கு விருந்தாகப் படைத்திருந்தனர் அந்த மாணவர்கள். மாணவிகள் ஆதித்யாவும் தேவிப்பிரியாவும் வடிவங்களைக் கருப்பொருள்களாகக்கொண்டு பல சாய ஓவியங்களும், அக்ரிலிக் ஓவியங்களும் படைத்திருந்தனர். அபிகெய்ல் வானதியின் நாய் ஓவியம், அனைவரையும் கவரும் அம்சத்துடன் இருந்தது. 

பூம் பூம் மாட்டுக்காரர் ஓவியம்

ரஞ்சித் என்கிற மாணவரின் அலைகள் ஓவிய வரிசையும், ஜான் பிராங்க்ளினின் `பூம் பூம்' மாட்டுக்காரர் மற்றும் மாடு குறித்த ஓவியங்களும் மிகுந்த நுட்பமாக வரையப்பட்டிருந்தன. பிரியங்கா மற்றும் ஓவியா இருவரும், மீன்களை அடிப்படையாகக்கொண்டு வெவ்வேறு வகையில் கலைத்திறனை வெளிப்படுத்தியிருந்தனர். மாணவர் பிரபாகரன் வரைந்திருந்த புத்தர் ஓவியங்கள், பார்ப்போருக்குள் புத்தம் புதிய நற்சிந்தனைகள் கிளர்த்தெழும் வண்ணம் இருந்தன. அதிலும் புத்தர் ஞானம் பெற்றுக்கொண்டிருக்கும் ஓவியம், கற்பனைக்கு அப்பாற்பட்ட கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. யோக ப்ரீதா வரைந்திருந்த பாய்மரங்கள் துறைமுகம் திரும்பும் ஓவியங்கள் சிறப்பான வண்ணத்தேர்வைக்கொண்டிருந்தன. மயில் மட்டுமே கருப்பொருளாகக்கொண்டு சக்திவேல் வரைந்திருந்த ஓவியங்கள், நம்மை ஓவிய உலகுக்குள் அழைத்துச்சென்றன.

வில்வநாதன் “கலை என்பது, விமர்சனங்களைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அது இன்னும் பட்டை தீட்டப்படும். விமர்சனங்களைச் சந்திக்காத படைப்புகளைக் கலைப்படைப்புகளாகக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இரண்டே இரண்டு கலைக் கல்லூரிகள்தான் இருக்கின்றன. இதில் சென்னையில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இலகுவாகப் பல்வேறு கலை வடிவங்களை, கண்காட்சிகளைக் காணும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும். எனவே, மாநகர மாணவர்களைப்போல பல்வேறு வாய்ப்புகளை அணுகுவதற்கும், குறிப்பிட்ட நிலப்பரப்பினுள் தேங்கிவிடாமல் போட்டி மிகுந்த சூழலை எதிர்கொள்ளவும் இந்தக் கண்காட்சி மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணுகிறேன்.

இதில் தன் படைப்புகளைப் படைத்துள்ள மாணவர்கள் பெரிய பொருளாதாரச் சூழலிலிருந்து வந்தவர்கள் அல்லர். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை. அதை அவர்கள் வாங்கிப் பயன்படுத்த, பெரும்பணம் செலவழிக்கவேண்டியிருந்தது. இங்கு வரும் பார்வையாளர்களின் மதிப்பீடு இளம் ஓவியர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இருக்கிறது என்பது பெரிய நம்பிக்கை தருகிறது. இது மாணவர்களுக்குப் பெரிய நம்பிக்கையைத் தரும். அச்சமும் தயக்கமும் இன்றி தங்கள் படைப்புகளை அவர்கள் வெளிக்கொண்டுவர, இந்தக் கண்காட்சி நம்பிக்கையை விதைத்துள்ளது" என்றார் ஓவியக் கல்லூரி பேராசிரியர் வில்வநாதன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்