‘ஐந்து நாள்களில் அனைத்தும் மாறும்!’ - சசிகலாவின் ‘திடீர்’ நம்பிக்கை

சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து இன்று மாலைக்குள் சென்னை வரவிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ' டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா. பரோல் காலம் முடிவதற்குள் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என அவர் நம்புகிறார்' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பரோலில் வரவிருக்கிறார். கணவர் நடராசனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் முதலில் கொடுத்த பரோல் விண்ணப்பத்தில் மருத்துவரீதியான ஆவணங்கள் முழுமையாகத் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையின் முதன்மைக் கண்காணிப்பாளர் சோமசேகரிடம் 4-ம் தேதி மனுகொடுத்தார் சசிகலா. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை நிர்வாகம், அவருக்குப் பரோல் வழங்கியுள்ளது. "இன்று மதிய உணவைச் சிறையில் முடித்துவிட்டு மாலை கார் மூலம் தி.நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார் சசிகலா.

ஐந்து நாள்கள் அவருக்குப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒரு வாரத்துக்கு மேல் பரோல் விடுப்பு என்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். தமிழக அரசின் தடையில்லாச் சான்றுக்காக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். இதற்கான அனுமதியை சென்னை மாநகரக் காவல்துறை வழங்கிவிட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவைத் தொடர்புகொண்ட காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், 'இந்த வீட்டில் சசிகலா தங்கவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு தி.நகர் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ' எத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறீர்கள்? வீட்டின் பேரில் எதாவது வில்லங்கம் இருக்கிறதா?' என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு இளவரசி குடும்பத்தினர் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை" என விவரித்த சசிகலா குடும்ப உறவினர் ஒருவர், 

தினகரன்" பரோல் விடுப்பில் சசிகலா வருவதற்கு மிக முக்கியக் காரணமே கட்சிதான். சிறைக்குச் சென்றபோது தினகரனிடம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் சிறை சென்றபோது, ' அவனை என்ன பாடு படுத்தறாங்க பாருங்க...எனக்காக ரொம்பவே கஷ்டப்படறான்' என வேதனைப்பட்டார். அதே மனநிலையோடு இப்போது சசிகலா இருக்கிறாரா என்றால், நிச்சயமாக இல்லை. தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். குடும்ப உறவுகளில் விவேக் ஜெயராமன் மட்டுமே டி.டி.வி பக்கம் இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் சசிகலா பக்கமே உள்ளனர். இதற்குக் காரணம் அமைச்சர்கள் தரப்பிலிருந்து சசிகலாவுக்குச் சென்ற கடிதங்கள்தாம். இந்தக் கடிதங்களில், ' தினகரன் செய்த தவறுகள் என்ன?' என்பதை விளக்கியுள்ளனர். ஓர் அமைச்சர் எழுதிய கடிதத்தில், ' அமைச்சர்களை அடிக்கும் அளவுக்கு தினகரன் சென்றதால்தான், டி.டி.விக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தது. சாதியைச் சொல்லி எல்லாம் அவர் திட்டுகிறார்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் படித்துவிட்டு குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் சசிகலா பேசும்போது, ' கட்சியிலும் ஆட்சியிலும் என்ன நடக்கிறது என்பதை என்னிடம் யாரும் முழுமையாகச் சொல்லவில்லை. இன்று எனக்குக் கடிதம் எழுதும் நிர்வாகிகள், அன்றே கூறியிருந்தால் நம்பிக்கையான சீனியரை துணைப் பொதுச் செயலாளராக்கியிருப்பேன். என் குடும்பத்தில் உள்ளவர்களை நான் பெரிதாக நினைத்திருந்தால், அன்றே டி.டி.வியை துணை முதல்வராக ஆக்கியிருப்பேனே...' என ஆதங்கப்பட்டார்.

இப்போதுகூட கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியில் வந்தாலும், அவர் கவனம் எல்லாம் கட்சிமீதுதான் உள்ளது. ஜெயலலிதா இறந்தபோது கார்டனுக்குள் வருவதற்கு நடராசன் விரும்பியபோது, ' அக்கா இருந்தபோது நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துவிடுகிறேன். யாரும் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். பரோலில் வரும்போது சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் தன்னைச் சந்திக்க வருவார்கள் என அவர் உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, ' நம்மை முழுமையாக வீழ்த்தும் அளவுக்கு ஒரு லாபி செயல்படுகிறது. அவற்றை எதிர்த்து நாம் தாக்குப்பிடிக்க வேண்டும்' என அடிக்கடி சொல்கிறார். பரோல் விடுப்பு முடிவதற்குள் கட்சிக் கட்டுப்பாட்டை தன் பக்கம் கொண்டு வந்துவிட முடியும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக. 

பரோல் விடுப்பு உறுதியானதும் தி.நகர் வீட்டை சசிகலா தேர்வு செய்ததற்கும் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது, ' பிரியா வீட்டில் போய் தங்கிக் கொள்' எனக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இந்த வீட்டை சசிகலா பயன்படுத்துவதற்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. பிரியாவின் ஜாதகமும் சசிகலாவின் ஜாதகமும் ஒன்று. பல முக்கிய முடிவுகளை இந்த வீட்டில் இருந்துதான் சசிகலா எடுத்திருக்கிறார். ஆனால், ஒரே ஒரு முரண்பாடு நடராசன் பிறந்த நவம்பர் 10-ம் தேதிதான் கிருஷ்ணபிரியாவுக்கும் பிறந்தநாள். சசிகலா சென்டிமென்டுக்கான உண்மைக் காரணத்தை மன்னார்குடி உறவுகளால்கூட அறிந்துகொள்ள முடியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!