ஸ்ரீதர் தற்கொலையும்… பின்னணியும்! | Reason behind Sridhar's suicide

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (06/10/2017)

கடைசி தொடர்பு:16:23 (06/10/2017)

ஸ்ரீதர் தற்கொலையும்… பின்னணியும்!

ஸ்ரீதர்

 

 

காஞ்சிபுரம் 'டான்' என்று அழைக்கப்பட்ட பிரபல ரவுடி ஸ்ரீதர், கம்போடியாவில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரைப் போன்ற ஒரு ரவுடிக்கு அதிர்ச்சியான முடிவுதான்.

 

ஸ்ரீதர் வளர்ந்தது எப்படி?

 

காஞ்சிபுரம் மாவட்டம் திருபருத்திக்குன்றம் கிராமம்தான் ஸ்ரீதரின் பூர்வீகம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு என்றாலும் மிகுந்த திறமைசாலி. அதிக பணம் சம்பாதித்து பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்ற ஆசை ஸ்ரீதருக்கு உண்டு. இதனால் சாராயம் காய்ச்சும் தொழிலில் இறங்கினார். அப்பகுதியில் கள்ளச்சாரய தொழிலில் மிகப்பெரிய டீலராக இருந்த சக்ரவர்த்தி என்பவரிடம் தொழில் உத்திகளைக் கற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர். பின்னாளில் சக்ரவர்த்தியின் மகளையே திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதர். வெளிமாவட்டம், மாநிலம் எனக் கள்ளச்சாராயத் தொழில் விரிவடையத் தொடங்கியது. தனது நெட்வொர்க்கும் கூடவே சேர்ந்து வளர்ந்தது. தொழிலில் சிக்கல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினரின் உதவி தேவைப்பட்டது. ஸ்ரீதர் அளித்த பணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையானது காவல்துறை. போலீஸ் உயரதிகாரிகளின் நட்பும், அடிமட்ட காவல்துறையினரின் விசுவாசமும் தொடர்ந்தது. அந்த விசுவாசம்தான் ஸ்ரீதரை கடைசிவரை பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம்.

வீழ்த்தப்பட்ட எதிரிகள்!

கடந்த 1999-ல் சாராயத் தொழிலில் போட்டி காரணமாக ராமதாஸ் என்பவரைக் கொலைசெய்தார் ஸ்ரீதர். இந்த வழக்கில் ஶ்ரீதருடன் ராஜேந்திரன், முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் பதியப்பட்ட இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் ஸ்ரீதர். பின்னர் 2002-ம் ஆண்டில் கணேசன் என்பரைக் கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்திலிருந்து வெளிவந்த ஸ்ரீதர், காவல்துறையினரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு இருந்த தொழில் போட்டியாளர்களைத் தொடர்ந்து வேட்டையாடினார். 2007-ம் ஆண்டில் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி கிருஷ்ணன், ஸ்ரீதருக்குப் போட்டியாகக் களமிறங்கினார். தொழில் போட்டியில் கிருஷ்ணனை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்து ஸ்ரீதர் தோல்வியடைந்தார். 2010-ல் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டபோது, கொலைக்கு முக்கியக் காரணமான ஸ்ரீதர் வேலூர் சிறையில் இருந்தார். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளின் நெருக்கத்தை ஶ்ரீதருக்கு அதிகப்படுத்தியிருந்தது. தொழில் ரீதியாகவும், திட்டமிடும் இடமாகவும் சிறைச்சாலைகள் அமைந்தன. 


ஸ்ரீதர் வீட்டில் ரெய்டு

2012-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளரான அம்பேத்கர் வளவன் (எ) நாராயணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், அதே ஆண்டில் சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் பயணித்துக் கொண்டிருந்த ரவுடி தேவராஜ் என்பவரை மிளகாய்ப் பொடி தூவி கொலைசெய்த சம்பவத்திலும் ஸ்ரீதர்தான் பின்புலமாகச் செயல்பட்டார்.

மிரட்டி வாங்கப்பட்ட சொத்துகள்…

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வயதான பெண் ஒருவரிடமிருந்து ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொத்தை, மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டது, காந்தி ரோட்டில் உள்ள அன்பழகன் என்பவரின் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பாத்திரக்கடை, காரை என்னும் இடத்தில் சுப்பிரமணி என்பவரின் 15 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்கியது, ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியிடமிருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து வீடு மற்றும் வேலூரில் உள்ள நான்கு வீடுகளையும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டது, வேடல் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகச் சொல்லி 10 பேரிடம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஏக்கர் நிலத்தை அபகரித்தது என ஸ்ரீதரின் குற்றப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஸ்ரீதருக்கு பயந்து யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதில்லை.

துபாய் அழைப்பில் நடுங்கிய காஞ்சிபுரம்!

துபாய் சிறையிலிருந்தபோது அருள், தி.மு.க ஒன்றியப் பொருளாளர் தசரதன், தினேஷ், தீனதயாளன், செந்தில் ஆகியோர் மூலம் ஸ்ரீதரின் அசைன்மென்ட்கள் முடிக்கப்படும். 'துபாய்ல இருந்து அண்ணன் பேசுறார்' என்று சொல்லி எதிர்த்தரப்பினரிடம் போனை கொடுப்பார்கள். ஸ்ரீதர் குரலைக் கேட்டதும் பயத்தில் அவர்கள் வாயடைத்துப் போவார்கள். இதனால் துபாயிலிருந்தே ஸ்ரீதர் தனது வேலைகளைச் செய்து முடித்துக்கொள்வார். துபாயில் சிறைக்கைதிகள் தொலைபேசியில் பேச அனுமதி உண்டு. இதனால், அங்கிருந்தே இந்தியாவிற்கு போன் செய்து மிரட்டுவது தொடர்ந்தது. ஸ்ரீதருக்கு ஞாபக சக்தி அதிகம். இதனால், தான் உபயோகிக்கும் செல்போன் எண்களை மனதில் வைத்துக் கொண்டு போன் செய்வது வழக்கம்.

வழக்கும், தலைமறைவும்…

ஸ்ரீதர்மீது ஐந்து கொலை, எட்டுக் கொலை முயற்சி, நான்கு ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடி-தடி, செம்மரக் கடத்தல் உள்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை ஐந்துமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 2006-ல் ஸ்ரீதரை என்கவுன்டரில் கொல்லப்போவதாக பரபரப்பு ஏற்பட்டது. தமிழகக் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, சென்னை விமான நிலையப் பாதுகாப்புப் பகுதிக்குள் காரில் அத்துமீறி நுழைந்தார். இதனால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸார் ஸ்ரீதரைக் கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீனில் வந்த ஸ்ரீதர், மலேசியாவில் தலைமறைவாக இருந்து, தனது அடியாட்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். மீண்டும் இந்தியா வந்த ஸ்ரீதர், வழக்கம்போல செயல்பட்டார். இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீதரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். சில வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த அவர், எதிரிகளால் கொலை செய்யப்படலாம் என்பதாலும், மீண்டும் கைதுசெய்யப்படலாம் என்பதாலும் வெளிநாட்டிற்குத் தப்பியோட முடிவெடுத்தார். காவல்துறையினர் ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கத் தவறியதால், நேபாளம் வழியாகத் துபாய் சென்றார். ஏமாற்றமடைந்த போலீஸார், இன்டர்போல் உதவியுடன் துபாயில் உள்ள ஸ்ரீதரைக் கைது செய்தனர். 2014-ல் காஞ்சிபுரம் எஸ்.பி-யாக இருந்த விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ஸ்ரீதரை இந்தியா கொண்டு வரமுயற்சி செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செல்வகுமாரிடம் பிடிஆணையும் பெற்றனர். ஆனால், அது செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. 

 

சந்தோஷ் குமார், ஸ்ரீதர்

 

இதனால் துயாய் சிறையிலிருந்து வெளியேறி அங்கேயே சுகபோகமாக வாழ்வைத் தொடர்ந்தார் ஸ்ரீதர். இலங்கை, மலேசியா, கம்போடியா எனப் பல நாடுகளிலும் சுதந்திரப் பறவையாக வலம் வந்தார். இதனால் ஸ்ரீதரைப் பிடிக்கும் காவல்துறையினரின் முயற்சி ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து கொண்டே இருந்தது. காவல்துறையினரின் கெடுபிடிகள் அதிகம் என்பதால், தனது மனைவி குமாரியையும், மகள் தனலட்சுமியையும் துபாய்க்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

வளைக்கப்பட்ட ஸ்ரீதர் குடும்பம்… முடக்கப்பட்ட சொத்துகள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரீநாத் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு, ஸ்ரீதரைப் பிடிக்கும் முயற்சி விறுவிறுப்படைந்தது. ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்து  குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதனால், ஸ்ரீதரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. ஸ்ரீதரின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த வருடம் காஞ்சிபுரம் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டார். துபாயில் இருக்கும் ஸ்ரீதருக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் காஞ்சிபுரம் காவல்துறையினர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். 2017 வரை பிசினஸ் விசா இருப்பதால் இந்தியா வராமலேயே வெளிநாடுகளிலேயே இருந்தார் ஸ்ரீதர். அவர்மீது பல்வேறு பிரிவுகளில் காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மனைவி குமாரி, மகள் தனலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. பின்பு அவர்களின்  பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த நிலையில், சில நாள்கள் முன்பு லண்டனிலிருந்து இலங்கை வழியாக இந்தியா வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரிடம் மத்திய அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர். சந்தோஷின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

தற்கொலை ஏன்?

தனது குடும்பத்தினரை நிரந்தரமாகப் பார்க்க முடியாத சூழல் ஸ்ரீதருக்கு ஏற்பட்டது. குடும்பத்தினரின் போக்கும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை. ஒருகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் மகனையும், மகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் போனது. இதனால், குடும்ப உறவுகளில் அவருக்கு விரிசல் ஏற்பட்டது. இந்தியா வந்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை. 'யாருக்காக வாழ வேண்டும்?' என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஸ்ரீதர், கம்போடியாவில் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. ஸ்ரீதரின் வாழ்க்கை இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

ஸ்ரீதரின் மீதான வழக்குகள் முடிந்தன…ஆனாலும், சர்ச்சைகள் தொடரும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்