`விமான நிலையத்தில் திரளுங்கள்!’: சசிகலாவை அசத்த தினகரன் தடபுடல் ஏற்பாடு

 

சசிகலா டிடிவிதினகரன்

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சித் தொண்டர்கள் வரத்தொடங்கிவிட்டனர். பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 7 மாதங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரை, அவரது உறவினர்கள் சென்னையில் இருந்து சென்று 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அடிக்கடி பெங்களூரு சென்று சசிகலாவை பார்த்து வந்தார்.

சசிகலாவின் உறவினர் மகாதேவன் மரணத்தின்போது சசிகலாவுக்கு பரோல் வாங்க முயற்சி செய்யலாமா? என்று அவரது குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி பரோல் மனு போட்டனர். 'பரோல் கொடுக்கும் அளவுக்கு போதிய காரணங்கள் இல்லை' என்று அப்போது அந்த பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சசிகாவின் கணவர் நடராசன், இப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரல், கிட்னி போன்றவைகளை மாற்றும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே, தனது கணவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று சசிகலா பரோல் கேட்டு சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.  அந்த பரோல் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சசிகலா சென்னைக்கு வருவார் என்று அ.தி.மு.க அம்மா அணியினர் தெரிவித்தனர். சென்னை வரும் சசிகலாவை வரவேற்க கட்சியினர் வரவேண்டும் என்று அ.தி.மு.க அம்மா அணி சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போய் இருக்கிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கார்களில் சென்னை விமான நிலையத்துக்கு சசிகலாவை வரவேற்க புறப்பட்டுவிட்டார்கள். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் இருந்தவாரே சசிகலாவை வரவேற்கும் வேலைகளை டி.டி.வி.தினகரன் கவனித்துவருகிறார். சசிகலாவை வரவேற்க பல ஆயிரம் பேர் வர வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் இருந்து  உத்தரவு போய் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!