வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (06/10/2017)

கடைசி தொடர்பு:15:38 (06/10/2017)

சென்னையிலிருந்து தீபாவளிக்கு 11,645 பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் 11,645 பேருந்துகள், 5 இடங்களிலிருந்து தீபாவளிக்கு இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

அக்டோபர் 18-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் இருக்கும் தென் மற்றும் வட மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்,  தங்கள் ஊர்களுக்குச் செல்ல ரயில், பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர். பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் தங்கள் இஷ்டம்போல கட்டணத்தை வசூலித்துவருகின்றன. இதைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகின்றது. இருந்தபோதும் கட்டணக்கொள்ளை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே, பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழக அரசு தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அக்டோபர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில், கோயம்பேட்டில் 26 சிறப்புக் கவுன்டர்கள் முன்பதிவுக்காகத் திறக்கப்படும். முன்பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியைத்  தவிர்க்க வேண்டும். அக்டோபர் 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில், சென்னை திரும்புவதற்கான பேருந்துகள் இயக்கப்படும். ஆந்திரா நோக்கிச் செல்லும் பேருந்துகள், அண்ணாநகரிலிருந்து இயக்கப்படும்'' என்று தெரிவித்தார்.