வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (06/10/2017)

கடைசி தொடர்பு:15:40 (06/10/2017)

வித்யாசாகர் ராவ் செய்த தவற்றை பன்வாரிலால் செய்ய மாட்டார்..! மு.க.ஸ்டாலின் சூசகம்

'முந்தைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தவறு செய்ததுபோல பன்வாரிலால் புரோஹித் தவறு செய்ய மாட்டார்' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவிப்பிரமாணம் எடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ''வாக்கி-டாக்கி ஊழல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். அதுவரை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யை பொறுப்பிலிருந்து விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆளுநர் வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம். முந்தைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த தவற்றை பன்வாரிலால் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, மரபுமுறை மீறப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.