வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (06/10/2017)

கடைசி தொடர்பு:19:14 (06/10/2017)

இரும்புக் கை மாயாவி - தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன்!

இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் காமிக்ஸ், அமர் சித்திர கதா எனத் தமிழில் காமிக்ஸ் இதழ்கள் 1960-களிலேயே ரெகுலராக வரத் தொடங்கிவிட்டாலும், 1972-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான `இரும்புக் கை மாயாவி'தான் தமிழ் காமிக்ஸ் உலகுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது. இங்கிலாந்தில் `The Steel Claw' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் தொடர், தமிழகத்தில் பெற்ற வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், இங்கிலாந்தில்கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில் இரும்புக் கை மாயாவியின் பெயர் அட்டையில் இருந்தாலே புத்தகம் விற்றுத் தீர்ந்துவிடும். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கடைகளில் இரும்புக் கை மாயாவியைப் போலவே `தங்கக் கை மாயாவி', `இரும்பு விரல் மாயாவி', `தங்க விரல் மாயாவி', `உலோகக் கை மாயாவி', `நெருப்பு விரல் சி ஐ டி' என ஏகப்பட்ட இமிட்டேஷன்கள் ஜொலித்தன. இந்த உள்ளூர் மாயாவிகளின் கதைப் புத்தகங்கள்கூட பத்தாயிரம் பிரதிகள் விற்பனை என்ற இலக்கை சர்வசாதாரணமாகத் தொட்டன. இதற்கெல்லாம் `இரும்புக் கை மாயாவி'தான் முக்கியமான காரணம்.

காமிக்ஸ்

இரும்புக் கை மாயாவி  1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் `வேலியன்ட்' என்று ஒரு புதிய காமிக்ஸ் வார இதழ் வெளியானது. Fleetway Publications சார்பாக IPC Magazines நிறுவனம் வெளியிட்ட இந்த காமிக்ஸ் வார இதழின் எடிட்டர்கள் மூவர் (கென் மென்னல், ஜாக் லெக்ராண்ட் மற்றும் சிட் பிக்னெல்). இந்த மூவர் கூட்டணி, வழக்கமான காமிக்ஸ் கதையைப்போல இல்லாமல் சயின்ஸ் காமிக்ஸ்ஃபிக்‌ஷன் கதைகளை காமிக்ஸ் வடிவில் கொண்டுவர விரும்பியது. அப்போது H. G.Wells எழுதிய புகழ்பெற்ற விஞ்ஞான புதினமான `த இன்விசிபிள் மேன்' (கண்ணுக்குத் தெரியாத மாய மனிதன்) காமிக்ஸ் வடிவில் 1950-களில் காமிக்ஸ் வடிவில் வெளிவந்து, சிறப்பாக விற்பனையும் ஆனது. இந்த இன்விசிபிள் மேன் திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதைப்போல ஒரு மாய மனிதனைப் பற்றிய கதையை உருவாக்க நினைத்த வேலியன்ட் எடிட்டோரியல் குழு, பிரபலமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் எழுத்தாளரான கென் பல்மரை அணுகியது. இவரது கதைக்கு ஸ்பானிய ஓவியரான ஜீசஸ் பிளாஸ்கோ ஓவியம் வரைய, அக்டோபர் ஆறாம் தேதியிட்ட வேலியன்ட் வார இதழில் முதன்முறையாக இரும்புக் கை மாயாவி அறிமுகம் ஆனார்.

உருவான கதை: பிரபல விஞ்ஞானி பாரிங்கரிடம் உதவியாளராகப் பணிபுரிபவர்தான் ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்த லூயிஸ் கிராண்டேல். எஃகினால் செய்யப்பட்ட ஓர் உலோகக் கை, இவரது மணிக்கட்டில் பொருத்தப்பட்டது. பாரிங்கர் ஒரு பரிசோதனையை மேற்கொண்டபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, அவரது பரிசோதனைக்கூடமே விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் கிராண்டேல் மீது அந்த உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய விளைவை உண்டாக்கிவிடுகிறது. மின்சாரம் பாய்ந்ததில் கிராண்டேலின் முழு உடலும் மாயமாக, அவரது உலோகக் கை மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. இந்த மாயமாக மறையும்தன்மை பாய்ச்சப்பட்ட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து, சில நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.

காமிக்ஸ்

இந்த விபத்தினால் மனக்குழப்பம் அடைந்த கிராண்டேல், தனக்குக் கிடைத்துள்ள சக்தியின் மதிப்பை உணராமல், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார். பிறகு தெளிவுபெற்று, பிரிட்டிஷ் உளவுத் துறையான நிழற்படையில் சேர்ந்து மிகச்சிறந்த உளவாளியாகிறான். காமிக்ஸ்ஒவ்வொரு முறை மின்சாரத்தைத் தொடும்போதும் மாயாவியின் உடல் மாயமாக மறைந்துவிடும். இப்படித்தான் இரும்புக் கை மாயாவி உருவானார்.

வேலியன்ட் என்பது, நம்ம ஊர் ‛சிறுவர் மலர்’ போன்ற ஒரு இணைப்பு இதழ். இதில் இரண்டு பக்க காமிக்ஸ் தொடர்கதையாக வெளியானது இந்த காமிக்ஸ் தொடர். இதற்கிடையில் இன்னும் அதிக அளவில் நாவல்கள் எழுதவேண்டி ஏகப்பட்ட கோரிக்கைகள் முன்வர, இரும்புக் கை மாயாவியின் முதல் மூன்று கதைகளை மட்டும் எழுதிய நிலையில் கென் பல்மர் இந்தக் கதை வரிசையை, காமிக்ஸ் உலகைவிட்டு விலகினார். அதற்கு அடுத்த கதைகளை எல்லாம் டாம் டுல்லி எழுதி `இரும்புக் கை மாயாவி' என்ற ஒரு சகாப்தத்தைத் தொடர்ந்தார்.

மாயாவியின் இரும்புக் கையில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு புதிய விசேஷ சக்தி கூடிக்கொண்டே வந்தது. முதலில் மாயமாக மறைவதற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட இரும்புக் கை, பிறகு ஒரு மின் கடத்தியாகச் செயல்பட்டது. அதன் பிறகு, அந்தக் கரத்தின் மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சும் வசதி, ஆள்காட்டி விரலில் இருந்த மினி துப்பாக்கி, நடுவிரலிலிருந்து வெளிவரும் மயக்க வாயு, உள்ளங்கையில் இருக்கும் மினி ரேடியோ என்று ஒரு ஜேம்ஸ்பாண்ட் வகையான உளவாளியானார் மாயாவி.

காமிக்ஸ்

கதை அமைப்பு: மாயாவியின் கதை வேலியன்டில் ஒவ்வொரு வாரத்துக்கும் இரண்டு பக்கங்கள் என, மொத்தம் 25 கதைகளில் மாயாவி தோன்றினார். இந்தக் கதைகளில் எல்லாம் இவர் உளவாளியாகவும் ஒரு சூப்பர் ஹீரோவாகவும் தோன்றுவார். ஆனால், 1967-ம் ஆண்டு வெளியான டைஜெஸ்ட் வடிவ கதைகளில் (122 பக்கம், பாக்கெட் சைஸ்) இவர் முழுக்க முழுக்க நிழற்படை உளவாளியாகவே வருவார். இந்த டைஜெஸ்ட், ஒரே ஒரு வருடம் (13 கதைகள்) மட்டுமே வெளியானது.

இதற்குப் பிறகு வெளியான கதைகளில் மாயாவி நிழற்படையை விட்டுவிலகி, தனியார் துப்பறிவாளராக இருந்த கதைகளும் உண்டு.காமிக்ஸ் இந்த வரிசையில், 12 தொடர்கதைகளாக மாயாவி வெளிவந்தார். பிறகு மறுபதிப்புகளில் மட்டுமே வெளியான `இரும்புக் கை மாயாவி'யை 1986-ம் ஆண்டு முழு வண்ணத்தில் அமெரிக்காவில் வெளியிட்டனர். 2005-ம் ஆண்டு புகழ்பெற்ற DC காமிக்ஸ் மறுபடியும் மாயாவியின் கதையை வெளியிட நினைத்து, கதாசிரியர் ஆலன்மூரின் மகளான லியா மூரை வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கினார்கள். அமெரிக்க மக்களுக்கு மாயாவியை மறு அறிமுகம் செய்ய மாயாவியின் முதல் மூன்று சாகசங்களைக்கொண்ட இதழை டைட்டன் காமிக்ஸ் மறுபதிப்பும் செய்தது.

தமிழ் பிரம்மாக்கள்: சிவகாசியைச் சேர்ந்த பிரபலமான அச்சுத் தொழில் நிறுவனத்தின் இளம் வாரிசான சௌந்தர பாண்டியன், விலை உயர்ந்த பிரின்டிங் மெஷின் ஒன்றை வாங்க சென்னைக்கு வருகிறார். `அம்புலிமாமா' இதழை வெளியிட்ட நாகிரெட்டி குழுமத்தினரிடம்தான் அந்த மெஷின் இருந்தது. அதைக் கையாள, சென்னையில் தங்கி பயிற்சியெடுத்தார் சௌந்தர பாண்டியன். அப்போது அம்புலிமாமா குழுமத்திலிருந்து `பால்கன் காமிக்ஸ்' என்ற இதழ் வெளியாகிக்கொண்டிருந்தது. அதில் வந்த சாம்பிள் காமிக்ஸ் கதையான `இரும்புக் கை மாயாவி'யைப் படித்தார் சௌந்தர பாண்டியன். பயிற்சியை முடித்த பிறகு, லண்டன் சென்று இரும்புக் கை மாயாவி கதைகளை இந்தியாவில் வெளியிட முறையான அனுமதி வாங்கினார்.

காமிக்ஸ்முல்லை தங்கராசன்: தமிழ் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இலக்கியத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான முல்லை தங்கராசன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். தமிழில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற காமிக்ஸ் (ஸ்ரீ வெங்கடேச பெருமான் மகாத்மியம்), தமிழிலிருந்து ஆறு மொழிகளுக்கு மொழிபெயர்த்த காமிக்ஸ், எம்.ஜி.ஆரை வைத்து காமிக்ஸ் உருவாக்கியவர் (கண்மணி காமிக்ஸ்) என்று பல புதுமைகளைச் செய்த அவர், சௌந்தர பாண்டியனுடன் கைகோக்க, 1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் முத்து காமிக்ஸின் முதல் இதழில் `இரும்புக் கை மாயாவி' வெளியானது. இதில் இன்னொருவரின் பங்களிப்பும் இருந்தது.

சௌந்தர பாண்டியன், `The Steel Claw' என்ற கதாபாத்திரத்துக்கு `இரும்புக்கை மாயாவி' என்று பெயர் சூட்ட, `மக்கள் குரல்' பத்திரிகையின் துணை எடிட்டரான அமரர் காமராஜுலு, இந்தக் காமிக்ஸ் கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அமரர் முல்லை தங்கராசன், அந்த மொழிபெயர்ப்பை தனது அசாத்திய மொழி ஆளுமையால் செம்மைப்படுத்த, தமிழின் முதல் காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் உருவானார்.

இரும்புக் கை மாயாவியின் சகாப்தம்: தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கை மாயாவியின் சகாப்தம் தொடர்கிறது. சமகால இயக்குநர்களான பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புதேவன், பொன்வண்ணன் போன்றோர் தங்களது சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர்.

காமிக்ஸ்

பல நடிகர்கள், இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க விரும்பினர். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தமிழின் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சித் தொடர் ஆரம்பித்தபோது, அதன் கதை இரும்புக் கை மாயாவியைத் தழுவியே இருந்தது.

நமது கலாசாரம் சார்ந்த கதை சொல்லவேண்டிய தமிழ் காமிக்ஸ் உலகின் போக்கையே மாற்றி, மொழிமாற்று காமிக்ஸ்களுக்கு முக்கிய இடம் அமைக்க இவர்தான் காரணம். இதனாலேயே, ஒரு காலகட்டத்தில் ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் படைப்புகள் உருவான போக்கு மாறி, மொழிபெயர்ப்புகளுக்கு வழிசெய்தவர் என விமர்சிப்பவர்களும் உண்டு.

பின் குறிப்பு 1: அக்டோபர் 6-ம் தேதியிட்ட இதழில்தான் `இரும்புக் கை மாயாவி'யின் முதல் கதை வெளியாகியிருந்தாலும், நிச்சயமாக அந்தப் புத்தகம் அதற்கு முன்பே வெளியாகியிருக்கும். ஆக, டெக்னிகலாகப் பார்த்தால், அக்டோபர் முதல் வாரம்தான் மாயாவியின் பிறந்த நாள்.

பின் குறிப்பு 2: இரும்புக் கை மாயாவியின் கதை என்று வேறு ஏதோ கதைகளை எல்லாம் வெட்டி, ஒட்டி வெளியிட்ட கூத்தும் தமிழில் நடந்துள்ளது.