Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஜெயலலிதாவுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யாதது ஏன்..?'' தமிழிசை கேள்வி

தமிழிசை

Chennai: 

''நடராஜனுக்கு இவ்வளவு பெரிய அசாதாரண முயற்சிகளை எடுத்து அவருக்கு ஆபரேஷன் நடத்திய சசிகலா குடும்பம். இதேப்போன்ற சிறப்பான, அதிவேக ஏற்பாடுகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் செய்யவில்லை?'' என்று டாக்டர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நடராஜனுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை. ஆனால், அது பல  உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளன எனச் சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது. நடராஜனை விமர்சனம் செய்வது நமது நோக்கமல்ல; அது நடைபெற்ற விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. நடராஜனுக்கு இவ்வளவு பெரிய அசாதாரண முயற்சிகளை எடுத்து அவருக்கு ஆபரேஷன் நடத்திய சசிகலா குடும்பம். இதேபோன்ற சிறப்பான, அதிவேக ஏற்பாடுகளை முன்னாள் முதல்வருக்கு ஏன் செய்யவில்லை? இதே வேகத்தையும், விவேகத்தையும் ஜெயலலிதா உடல் நிலையில் காட்டியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பாரோ? என்ற கவலை நமக்கு வருகிறது ஏனென்றால், ஜெயலலிதா உடல் நிலை கடைசிக் காலங்களில் சசிகலாவின் உறவு டாக்டர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பது நிதர்சனம்.

அரசு மருத்துவமனைக்கும் வரும் ஏழை எளியவர்களின் உடலுறுப்புகள் ஏன் தனியார் மருத்துவமனைக்கே அதிகம் பயன்படுகிறது? அவை ஏன் அரசு மருத்துவமனைகளில் முறையாக ஏழைகளுக்குப் பயன்படுத்துவதில்லை? தஞ்சை மருத்துவக்கல்லூரி உடலுறுப்பு மாற்று ஆபரேஷன்  நடைபெற்று வந்தது ஏன் நடைபெறுவது நிறுத்தப்பட்டது? அங்கேயே  உடலுறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றாமல் சென்னைக்கு குளோபல் மருத்துவமனைக்கு ஏன் மூளைமரணம் அடைந்தவர் எடுத்து வரப்பட்டார்? அவர் விமானத்தில் வந்தபோது அவருடன் ஏன் அரசு மருத்துவர்கள், அரசுப் பணியாளர்கள் பயணித்தார்கள்? தஞ்சை மருத்துவமனையில் மூளை மரணம் பதிவு செய்யப்பட்டதா ? அங்கு அவருக்கு முறையான சிகிசைகள் அளிக்கப்பட்டதா? சிறப்பு நிபுணர்கள் ஆலோசனை பெறப்பட்டது?  தஞ்சாவூரில் சென்று உடலுறுப்பு வியாபாரம் பேசியவர்களில் யாராவது அரசுத் தரகர்கள் உள்ளனரா?  விசாரிக்க வேண்டும்.

இதேபோல்  ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்து வந்த கல்லீரல் மாற்று சிகிக்சை, ராஜீவ் அரசு மருத்துவமனையில் நடத்த இருதயமற்று அறுவை சிகிக்சை போன்ற வசதிகள் ஏன் நின்றுபோயின? அதற்காக அரசு செய்த முதலீட்டுச் செலவினங்கள் ஏன் வீணடிக்கப்பட்டது? எதற்கு யார் பொறுப்பு ? ஏழை எளிய மக்கள்  மாற்று உறுப்புகள் சிகிசைக்கு ஏன் தனியார் மருத்துவமனைகளை மட்டும் நம்பியிருக்க வேண்டும்? முதல்வர் காப்பீட்டு நிதியில் பெரும்தொகை ஏன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. குளோபல், அப்போல்லோ மருத்துவமனைகளில் இதுவரை நடந்த கல்லீரல், இதயம், நுரையீரல் மாற்றுச் சிகிச்சைகளின் பயனாளிகள் யார்? யார் ? விசாரித்தால் அதில் வெளிநாட்டினர், வெளிமாநிலத்துப் பகையாளர்களே அதிகம் என்பதும் தெரியவரும். இதில் எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளது? எந்தெந்த அரசு மருத்துவமனைகளிலிருந்து ஏழைகளின் உடலுறுப்புகள் என்னென்ன பெறப்பட்டன ? இதற்கு யார் உடந்தை? என்பது விசாரிக்கப்படவேண்டும்.

நடராஜனுக்கு ஏற்கெனவே அவரது உறவினர்கள் தானம் செய்ய தமிழக அரசின் உடலுறுப்பு தான கண்காணிப்புக் குழு அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஏன் அவரது உறவினர்களிலிருந்து தானம் பெறப்படவில்லை. தஞ்சையிலிருந்து ஏழை ஒருவர் வந்ததின் பின்புலம் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுகிறது. இதுபோன்ற செய்திகள் சந்தேகங்கள் கடந்த 2 நாள்களாக பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இது தெளிவுப்படுத்த வேண்டும். நமது விமர்சனம் தனிமனிதரைப் பற்றியது அல்ல. அதன் மூலம் வெளிவந்த உடலுறுப்பு வியாபாரத் தந்திரம் தனியார் மருத்துவமனைகளில் நடப்பதுபோல் அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இதுபோன்ற ஆபரேஷன்கள் நடைபெறுவதில்லை என்ற ஆதங்கம். இதே போல் ஜெயலலிதாவைக் காப்பாற்ற அதிதீவீர ஏற்பாடுகள் ஏன் நடக்க வில்லை என்ற வருத்தமுமே நான் எழுப்பும் கேள்விகளுக்குக் காரணம். முறையான விசாரணை நடக்க வேண்டும். அப்போதுதான் பல  உண்மைகள் வெளிவரும்'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement