Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறார் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்?

பன்வாரிலால் புரோஹித்

மிழகத்துக்கு கடந்த ஓராண்டு காலமாக நிரந்தர ஆளுநர் இல்லாமல், மஹாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். இவர், 2016 செப்டம்பர் 2-ம் தேதி கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பதவியையும் ஏற்றார். வித்யாசாகர் பதவியேற்ற சில நாள்களிலேயே தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெ. மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் மரணம் அடையும்வரை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனாலும், 'அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்' என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஜெ. மறைவுக்குப் பின் ஓ.பி.எஸ். பதவியேற்பு, அவர் பதவி விலகியது, சசிகலாவை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை, எடப்பாடி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு முதல்வரானது போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்ட போதிலும் நிரந்த ஆளுநர் யாரும் தமிழகத்திற்கு நியமிக்கப்படவில்லை. 

இந்நிலையில்தான், கடந்த சில தினங்கள் முன்பு, பன்வாரிலால் புரோஹித்தைத் தமிழகத்துக்கான முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதையடுத்து, பன்வாரிலால், இன்று தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார். 

வித்யாசாகர் ராவ் முழுநேர ஆளுநராக இல்லாததால், தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறிவரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அவர், சென்னைக்கும் மும்பைக்கும் மாறி, மாறி பயணம் செய்துவந்தார். இதனால், வித்யாசாகர் ராவின் முன்னிலையில் ஏராளமான சவால்கள் இருந்தன. ஆனால், அவற்றில் எதையும் அவர் பொருட்படுத்தாமல் தன் பதவிப் பொறுப்பை நிறைவு செய்து விட்டு மும்பை திரும்பிவிட்டார். தமிழக அரசியலில் ஏற்பட்ட பல குழப்பங்களுக்கு அவரால் தீர்வு காண முடியவில்லை. தமிழகப் பொறுப்பு ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்ற வித்யாசாகர் ராவ், மாநில மக்களுக்க நன்றி தெரிவித்துக் கொண்டு புறப்பட்டார்.

இதையடுத்து, தமிழகத்தின் 20-வது ஆளுநராகப் பதவியேற்றுள்ளார் பன்வாரிலால் புரோஹித். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் ப. தனபால், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

வித்யாசாகர் ராவ்

ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட பன்வாரிலால், "என்னுடைய அனைத்து முடிவுகளும் அரசியல்சாசன சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அரசியல் சட்டத்தைப் போற்றிப் பாதுகாக்க நான் முடிவெடுத்துள்ளேன். பெரிதோ அல்லது சிறிதோ, நான் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளும் அரசியல்ரீதியான பரிந்துரையில் அமையாது. ஆளுநர் அலுவலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அனைத்து முடிவுகளும் அவற்றின் தன்மைக்கேற்பவே எடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரை, மாநில அரசுக்கு நான் முழு ஆதரவு அளிப்பேன். டெல்லியில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். எனவே, தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்படுவதை நான் உறுதிசெய்வேன். அரசு நிர்வாகத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை இருப்பது பற்றி நான் கவனிப்பேன். தமிழகத்தில் உள்ள அனைத்துச் சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பேசினார்.

ஜெயலலிதா இருந்தவரை அவரின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டு, செய்தியாளர்களிடையே ஒருவார்த்தைகூட பேசாத, அல்லது பேசத் திராணியில்லாத அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஆளாளுக்கு ஓர் அணியைச் சேர்த்துக்கொண்டு, பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிகள் இணைந்து விட்டபோதிலும், இரு அணிகளைச் சேர்ந்தவர்களில் அதிகார பதவி கிடைக்காதவர்கள், ஒருவருக்கொருவர் நீறுபூத்த நெருப்பாகவே புகைச்சலை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும், அவரால் எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத சூழல் நிலவுவதாகவே அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. மற்றொருபுறம் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, எடப்பாடிமீது நம்பிக்கையில்லை என்று மனு அளித்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது, அதை எதிர்த்து தினகரன் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை, இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, தமிழகத்தில் வெகுவிரையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் தமிழக அரசியல் களத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரைப் பார்க்க சசிகலாவுக்குக் கர்நாடக நீதிமன்றம் ஐந்து நாள் பரோல் வழங்கியிருப்பது, சென்னையில் அதனால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை போன்ற பல சவால்களை ஆளுநர் பன்வாரிலால், எதிர்கொள்ள வேண்டியுள்ளது. "அரசியல் சட்டப்படியே தன் முடிவுகள் அனைத்தும் இருக்கும்" ஆளுநர் மறைமுகமாகத் தமிழக அரசுக்குத் தன் நிலைப்பாட்டை உணர்த்தியுள்ளார். டெல்லியில் தனக்கு நண்பர்கள் உள்ளனர் என்று தெரிவித்து, எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்-க்கும் குட்டு வைத்துள்ளார் ஆளுநர். மேலும் தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுத்தருவேன் என்று குறிப்பிட்டு, தன் மேலான அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித்

ஏற்கெனவே வித்யாசாகர் ராவிடம், "தமிழக சட்டசபையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் தனித்தனியாக வலியுறுத்தி இருந்தனர். "தற்போது, ஆட்சி மாற்றம் போன்று, தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் நடந்துள்ளதால், அதே கோரிக்கைகளை தினகரன் ஆதரவாளர்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் மீண்டும் நிரந்தர ஆளுநரிடம் வலியுறுத்துவார்கள்" என்று எதிர்பார்க்கலாம். அப்படிக் கோரிக்கைகள் வரப் பெற்றால், பன்வாரிலாலின் நிலை அல்லது நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.

"தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் முன் உள்ள சவால்களுக்கும் ஏற்றவாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் இருக்கும். இருக்க வேண்டும்" என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாள்தோறும் நடந்தேறி வரும் தமிழக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருக்கிறார். 

அதற்கேற்ப, "எந்த முடிவையும் அறிவிக்காமல் வித்யாசாகர் ராவ் இருந்ததைப் போன்று அல்லாமல், தமிழக அரசியலின் தற்போதைய அவசர நிலையை அறிந்து புதிய ஆளுநர் விரைந்து செயல்படுவார் என்று நம்புகிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, பல்வேறு சவால்கள், நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, எந்தப்பக்கத்திற்கும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படாமல், நடுநிலையோடு புதிய ஆளுநர் செயல்படுவார் என நம்புவோம்! புதிய ஆளுநரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement