Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

233 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா!

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளியே வந்தார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். சிறைத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கணவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று சசிகலா கர்நாடகச் சிறைத்துறையிடம் மனு அளித்தார். முதலில் அவர் அளித்த மனுவில், கணவர் நடராசன் உடல்நிலை குறித்த ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்று கூறி, பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கணவர் நடராசனின் உடல்நிலை குறித்த விரிவான ஆவணங்களுடன் 15 நாள்கள் பரோல் கோரி அவர் மீண்டும் மனு செய்தார். அவரது மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவுக்குச் சில நிபந்தனைகளுடன் 5 நாள்கள் பரோல் அளித்தது. இதையடுத்து, 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் 5 நாள்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். பெங்களூருவிலிருந்து காரில் இன்று மாலையே சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்குகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement