வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (06/10/2017)

கடைசி தொடர்பு:20:04 (06/10/2017)

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? - இறுதி விசாரணை தொடங்கியது

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை சற்றுமுன் தொடங்கியது. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் குழுவோடு எம்.பி மைத்ரேயன் மற்றும் கே.பி முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள்.

இச்சூழலில் விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் அவசர அழைப்பு காரணமாக டெல்லி விரைந்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அதே நேரம் பரோலில் வெளியாகியிருக்கிறார் சசிகலா.

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் மிக முக்கிய நிகழ்வாக இரட்டை இலைச் சின்னம் மீட்பு அமையும் என்று கருதிய பன்னீர்−எடப்பாடி தரப்பு, சின்னத்தை மீட்டு கட்சியை முழுவதுமாகக் கைப்பற்றும் எண்ணத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அதை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் அவசர டெல்லி பயணம் ஒரு தீர்வை நோக்கியே இருக்கும் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.