வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (06/10/2017)

கடைசி தொடர்பு:18:49 (06/10/2017)

மரண பயத்தில் வாகன ஓட்டிகள்! சென்னையில் மிரளவைக்கும் சாலை

வீடியோவை காண க்ளிக் செய்க....

சென்னை கொளத்தூரிலிருந்து அம்பத்தூர் செல்லும் சாலை 6 மாதங்களாக மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மரண பயத்திலேயே செல்கின்றனர்.

சென்னையில் தனியார் நிறுவனங்கள் கேபிள் வயர்களைப் பதிப்பதற்காகச் சாலையில் பள்ளம் தோண்டுகின்றனர். வேலை முடிந்தவுடன் அந்தப் பள்ளத்தைச் சரியாக மூடாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. தற்போது சென்னையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குண்டும்குழியுமாகக் காணப்படும் சாலைகள் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சென்னையில் மிகவும் மோசமான, வாகனங்கள் செல்ல தகுதியில்லாத நிலையில் சாலையில் கடந்த 6 மாதங்களாக மரண பயத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். ஆவடியிலிருந்து அம்பத்தூர், புதூர், கள்ளிக்குளம், டீச்சர் காலனி வழியாகச் சென்னைக்கு சீக்கிரமாக வருபவர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்தச் சாலையோரங்களில் அமைந்துள்ளன. அரசு பேருந்துகள், மினி பேருந்துகள், தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆகியவை இந்தச் சாலையைக் கடந்துதான் சென்று வருகின்றன.

வீடியோவை காண க்ளிக் செய்க....

அம்பத்தூர் தொகுதிக்குட்பட்டதுதான் இநக்ச் சாலை. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அலெக்சாண்டர் இருக்கிறார். 6 மாதங்களாக இந்தச் சாலையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டபோது, "கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் இங்கு கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் வேலை நடந்தது. இரண்டு மாதத்துக்கு மேல் நடந்த இந்தச் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. வேலை முடிந்தவுடன் அவற்றை மூடிவிட்டுச் சென்றனர். மீண்டும் சாலை போடவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சாலை சேறும் சகதியுமாகக் கிடக்கிறது. வாகனத்தில் செல்வோர் உயிரைக் கையில் பிடித்துச் செல்கின்றனர். இந்தச் சாலையைச் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோவை காண க்ளிக் செய்க....

மோசமான நிலையில் இருக்கும் இந்தச் சாலையைச் சீரமைக்காதது ஏன் என்பது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலெக்சாண்டரைத் தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.