வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (06/10/2017)

கடைசி தொடர்பு:20:01 (06/10/2017)

அலட்சியத்தின் உச்சத்தில் அங்கன்வாடி மையம் - பயத்தில் குமுறும் பெற்றோர்கள்!

காங்கேயம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடி கிராமத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் 4 புறங்களில் ஓரிடத்தில் மட்டும் காற்றோட்டத்துக்காகக் கம்பிவலையைச் சுவர்போல் அமைத்திருக்கிறது அங்கன்வாடி நிர்வாகம். மேலும் இந்த அங்கன்வாடி மையத்தின் மின்சாரப் பெட்டியில் இருந்துதான், அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கும் ஒயர் மூலம் மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில்,
கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் செல்லும் மின்சார ஒயர், அங்கன்வாடியில் சுவர்போல அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையின் வழியாகவே செல்வதால், மழைக்காலங்களில் இந்தக் கம்பி வலையில் மின்சாரம் பாய்ந்து ஆபத்தை உண்டாக்கும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. 

இதுதொடர்பாக அங்கன்வாடி அமைப்பாளரிடமும் உதவியாளரிடமும் சென்று பலமுறை அறிவுறுத்தியும் அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். தற்போது மழைக்காலமும் வேறு தொடங்கியுள்ளதால், இந்த அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளோ அங்கு பணியாற்றும் ஊழியர்களோகூட இந்த மின்சார ஓயர் பிரச்னையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த மின்சார ஒயரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் பெற்றோர்கள்.

அங்கன்வாடி மையம் பற்றிய எந்தவித விழிப்பு உணர்வும் இல்லாமல், ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி, தனியார் பிளே- ஸ்கூலில் குழந்தைகக்ச் சேர்ந்துவிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் குழந்தைகளின் உயிரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், நம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால், இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் காணாமல் போகும் நிலைமைதான் ஏற்படும்.

அரசும் அதைத்தான் விரும்புகிறதா?