இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: விசாரணை ஒரு வாரம் ஒத்திவைப்பு!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையைத் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. 

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்ய அவகாசம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தினகரனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நவம்பர் 10-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பிற்பகலில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் தினகரன் தரப்பில் விஜய் ஹன்சாரியும் ஆஜராகி வாதிட்டனர். 

கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி ஒருவார காலம் அவகாசம் தினகரன் தரப்பில் கோரப்பட்டது. மேலும், எதிரணியினர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்கள் யாவும் கட்டாயத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் வாதிடப்பட்டது. விசாரணையைக் காலம்தாழ்த்தும் நோக்கிலேயே தினகரன் தரப்பில் அவகாசம் கேட்பதாகவும், அவகாசம் அளிக்கக் கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சின்னத்துக்கு உரிமைகோரும் சசிகலா குற்றவாளியாகவும் தினகரன் வழக்குகளை எதிர்கொண்டு வருபவராகவும் இருப்பதாக வாதிடப்பட்டது.

2 மணி நேரம் நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 13-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!