வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (06/10/2017)

கடைசி தொடர்பு:07:24 (07/10/2017)

ஆட்டோ டிரைவருடன் மோதிய டீ மாஸ்டர் மரணம்..!

திருப்பூர் அருகே ஆட்டோ டிரைவரோடு கைகலப்பில் ஈடுபட்ட பேக்கரி ஊழியர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவுப் பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக வேலைபார்த்து வந்தவர் முத்துசாமி. இந்த நபருக்கும் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராகப் பணியாற்றி வரும் செல்வம் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதமும் தொடர்ந்த வண்ணம் இருந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல முத்துசாமிக்கும் செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் துவங்க, பின்னர் அப்படியே தகராறு முற்றி, கைகலப்பு வரை சென்றிருக்கிறது.

எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கிக்கொண்டுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் செல்வம், முத்துசாமியைப் பிடித்து வேகமாக கீழே தள்ளியதாகவும், அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துசாமிக்குத் தலையில் பலத்த அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, மாஸ்டர் முத்துசாமியை மீட்டு திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள்ளாகவே முத்துசாமி மரணமடைந்திருக்கிறார். பின்னர் இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட, திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முத்துசாமியுடன் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் செல்வத்தைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.