Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபத்துக்குள்ளான காரில் மரகதலிங்கம் கடத்தல்?

புதுக்கோட்டை மாவட்டம் அருகே விபத்தான காரில் மரகதலிங்கம் இருந்ததாகக் கூறப்படுவதால் திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்கார்பியோ காரும் அரசுப் பேருந்தும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள, கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் இன்று காலை நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பெரியளவில் சேதமடைந்தது. காரில் வந்த நான்குபேர் படுகாயம் அடைந்தனர். விபத்துகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸார், ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள், தற்போது திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரகதலிங்கம்

மேலும், விபத்துக்குள்ளான காரில் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பு அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து காரை போலீஸார், சோதனையிட்டதில், காருக்குள் 7 கிலோ எடையுடைய மரகதலிங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 கோடி வரை இருக்கலாம் எனத் தகவல்கள் உலாவரத் துவங்கியதால், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து, விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். அந்த லிங்கம் புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியானது. பத்திரிகையாளர்கள், பலமணி நேரமாகக் காத்திருந்தும், அந்த லிங்கம் புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் குறித்து விசாரித்தோம்.

இதுகுறித்து போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காயமடைந்தவர்கள் காசி, முருகன், தூத்துக்குடியைச் சேர்ந்த தங்க மாரியப்பன், சக்கரவர்த்தி என்பது தெரியவந்தது. இவர்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டு இருந்தோம் என்றும், தங்கள் காரில் கொண்டு சென்றது மரகதலிங்கம் இல்லை என்றும், கிரீன் அவஞ்சர் எனும் கிரானைட் என்றும் கூறியதாகவும், அதற்கான பில்கள் தங்களிடம் இருப்பதாகக் காயமடைந்தவர்கள் கூறியதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட லிங்கம் மரகதலிங்கமா, இல்லை கிரானைட் கல் சிலையா என்பதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement