Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே தீர்மானம்... ஒரு மணிநேரக் கூட்டம்... கப்சிப் என முடிந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம்!

காங்கிரஸ் தலைவர்கள்

கோஷ்டிப் பூசலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம், எந்தவித சச்சரவும் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது. 

அகில இந்திய அளவில்  காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. தமிழகத்துக்கு மே மாதத்துக்குள் உறுப்பினர் சேர்க்கை முடித்து, கிளைக் கழகத்தில் மாவட்டக் கமிட்டி, பொதுக்குழு உறுப்பினர்கள்வரை அனைத்து மட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தனர். தமிழகக் காங்கிரஸ் கமிட்டியில் மாவட்ட வாரியாகவே உறுப்பினர் சேர்க்கையே முடிவடையாமல் இருந்ததால், தமிழகத்துக்கு மட்டும்  உட்கட்சித் தேர்தல் நடத்த டெல்லித் தலைமை கூடுதல் அவகாசம் கொடுத்தது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதி. ஆனால், தமிழகக் காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சித் தேர்தல் கடைசியாக 1998-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு உட்கட்சித் தேர்தலும் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவில்லை. பல ஆண்டுகள் தேர்தலே நடைபெறாமல் இருந்த தமிழகக் காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கான தேர்வு எல்லாம் நடைபெற்றது. 

உறுப்பினராகச் சேர்வதற்கு ஐந்து ரூபாயும், பொதுக்குழு உறுப்பினராகப் போட்டியிட 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாவட்டவாரியாகத் தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த வாரத்தோடு தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்மூலம் மாவட்டத் தலைவர்கள் தேர்வும் முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவடைந்த பிறகு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற வேண்டும். பெரும்பாலும் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் தேர்வை முடித்துவிடும் வழக்கம் உண்டு. அதை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் காமராஜர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்திருந்தனர். கூட்ட அரங்கின் வெளியே மாவட்டவாரியாகத் தேர்வுசெய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலை வைத்திருந்தனர். கோஷ்டிப் பிரச்னைகளால் ஏதும் சரச்சைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. 

காங்கிரஸ் பொதுக்குழு

''10-30 மணிக்குக் கூட்டம் தொடங்கும்'' என்று அறிவித்திருந்தனர். ஆனால், ''10-30 மணி முதல் 12 மணிவரை ராகு காலம் என்பதால், 12 மணிக்குக்  கூட்டம் தொடங்கும்'' என்று இரண்டாவது முறையாக அறிவித்தனர். ''பொதுக்குழு உறுப்பினர் பதவிக்குப் பணம் கட்டிய எங்களைத் தேர்வு செய்யாமல், பணமே கட்டாதவர்கள் எல்லாம் பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளார்கள்” என்று வெளியே நின்ற சிலர் புலம்பவும் செய்தனர். மேலும்,  ''பொதுக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட  விண்ணப்பப் படிவத்தையே காங்கிரஸ் மூத்த தலைவர் தனுஷ்கோடி ஆதித்தன், நிராகரித்த அதேவேளையில், விண்ணப்பமே செய்யாமல் குஷ்புவுக்குப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது'' என்ற குற்றச்சாட்டையும் வெளியே நின்றவர்கள் தெரிவித்தனர். 

சரியாக 12 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. மேடையில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் மற்றும் பாபுஜி ராவ் ஆகியோரும் இருந்தனர். பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும் தேர்தல் பார்வையாளர்கள் இருவரும் முதலில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய திருநாவுக்கரசர், “காங்கிரஸ் கட்சியில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொதுக்குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் டெல்லித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்தமாத இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ள காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் அகில இந்திய அளவிலான காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்வும் நடைபெற உள்ளது. 'தமிழகக் காங்கிரஸில், கோஸ்டிகள் இருக்கிறது' என்று சொல்வார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலையும் நடத்தி முடித்துள்ளோம். கட்சிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுக் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் நாம் அனைவரும் முனைப்புக்காட்ட வேண்டும்” என்றார்.

அதன்பிறகு, ஒரே ஒரு தீர்மானத்தோடு ஒருமணி நேரத்தில் முடிந்துவிட்டது காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement