வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (06/10/2017)

கடைசி தொடர்பு:08:55 (07/10/2017)

டெங்குவிலிருந்து மக்களைக் காக்கத் தவறிய அரசு! -கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

டெங்கு கொசு

'டெங்கு'- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும், எடப்பாடி பழனிசாமி அரசையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. டெங்குக் காய்ச்சலினால் நாளுக்கு நாள் பெருகிவரும் உயிரிழப்புகள் கண்டு மக்கள் ஒருபக்கம் கொதித்துக்கொண்டிருக்க... டெங்குவைத் தடுக்கும் நடவடிக்கைகளில், அரசு மெத்தனப் போக்கை கையாள்வதாக கொந்தளிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

டெங்கு பரவ மாமூல் வாங்குகிறதா அரசு?

தனது கொளத்தூர் தொகுதியில், டெங்குக் காய்ச்சல்குறித்து ஆய்வுமேற்கொண்ட தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசும்போது, 

ஸ்டாலின் "தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரே கூறியிருக்கிறார். ஆனால், இதுவரை டெங்குக் காய்ச்சலுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் தினமும் 10 பேர் டெங்குக் காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குக் காய்ச்சல் பாதிப்பினால் இறந்திருப்பதாகவும் எங்களுக்கு ஆதாரபூர்வமானத் தகவல் வந்திருக்கிறது. ஆனால், இந்தத் தகவல்களை எல்லாம் மூடி மறைத்து, தவறான தகவலை அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் குப்பை, கூளங்களை முறையாகச் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் செய்யாமல் டெங்கு பாதிப்பு எந்தப் பகுதியில் இருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு வந்து குப்பைகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பணியில் இந்த அரசு ஈடுபடவில்லை" என்கிறார் கோபமாக.  தொடர்ந்து பேசும் அவர், "டெங்கு ஒழிக்க அரசு 16 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகக் கூறுகிறது. இந்தப் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. குட்கா விற்பதற்கே மாமூல் வாங்கியவர்கள், இப்போது டெங்கு பரவுவதற்கும் மாமூல் வாங்குகிறார்களோ என்று சந்தேகமாக உள்ளது. டெங்கு தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது நம் கடமை" என்றார் அழுத்தமாக.

டெங்குவுக்கு பொதுமக்கள் மீதே குற்றம் சொல்லலாமா ?

"டெங்கு காய்ச்சலினால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரியவருகிறது. 'பத்து நாள்களில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவோம்' என்று தெரிவித்த தமிழக அரசு 2 மாதங்களுக்கு மேலாகியும் டெங்கு வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு குறிப்பான நடவடிக்கைகளை எடுக்காததும், அதற்கான ஊழியர்களை நியமிக்காததும், தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாததுமாக கோட்டைவிட்டதன் காரணமாகவே இன்று டெங்குக் காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்புகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசே முழுப் பொறுப்பாகும்" என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன். தமது கண்டனத்தைத் தொடரும் அவர், "தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களது ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் கருவி ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள், மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள் கூட பல மருத்துவனைகளில் இல்லை. நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களினாலேயே பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல், ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதிகாரிகள்தான் உள்ளாட்சி அமைப்புகளைச் செயல்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால், டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை ஓரளவு சரியான முறையில் எடுத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் தமிழக அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது. ஆனால், தற்போது குடியிருப்புப் பகுதிகளில், டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச்சுகாதார சட்டப்பிரிவுகளின்படி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியதாகும். எனவே, டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையளிக்கவும் ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும்'' என்கிறார்.

'மருத்துவ அவசர நிலை' பிரகடனப்படுத்த வேண்டும் :

டெங்குக் காய்ச்சலுக்கு எதிராக சில ஆலோசனைகளைக் கூறுகிறார் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர்  அன்புமணி.

"டெங்குக் காய்ச்சல் பத்து நாள்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இரு மாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று வரை அது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியிருப்பது கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடுகிறது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது துயரத்தை ஏற்படுத்துகிறது. டெங்கு நிலைமை இந்த அளவுக்கு கைமீறிப் போய்விட்ட நிலையில்தான், தமிழக ஆட்சியாளர்கள் அன்புமணி சென்னையில், ஆட்டோவில் சென்று நிலவேம்புக் கசாயம் கொடுக்கும் திட்டத்தையும், கொசு ஒழிப்புக்காக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர். டெங்குக் காய்ச்சல்குறித்து ஆய்வுசெய்த இந்தியப் பொது சுகாதாரச் சங்கம், தமிழகத்தில் 12,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மருத்துவ அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மருத்துவ அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதன் மூலம் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்குக் கூடுதல் நிதியையும், டாக்டர்களையும் பெற முடியும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு இந்தியப் பொது சுகாதார அமைப்பு பரிந்துரைத்த போதிலும் ஆட்சியாளர்கள் அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள்தான் அதிகரிக்குமே தவிர, நோய்த் தடுப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. எனவே, மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி மருத்துவ அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும். டெங்குவைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும். அதை அரசு போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் அக்கறையோடு.

மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் மந்திரி விஜயபாஸ்கர்

ஆம்னி பஸ்ஸில் வரும் கொசுக்கள் :

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், டெங்குக் காய்ச்சல் குறித்து தமிழக அரசு தரும் விளக்கங்கள் என்ன தெரியுமா ?

'டெல்லியில் இருந்துதான் டெங்கு கொசுக்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தன' என்றார் எம்.பி காமராஜ். 'சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த சில அதிகாரிகளோ, " நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதனால், டெங்கு உருவாகக் காரணமாக இருக்கும் சென்னை நகரத்தைச் சேர்ந்த ஏ.டி.எஸ் கொசுக்களில் வீரியம் இருக்காது. அதேவேளை மதுரை, சேலம் போன்ற நகரங்களில் டெங்குவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த நகரத்தைச் சேர்ந்த கொசுக்கள், டெங்குக் காய்ச்சலைப் பரப்புமளவுக்கு வீரியத்துடன் உள்ளன. மதுரை, சேலத்தைச் சேர்ந்த கொசுக்கள், குளிர் சாதன வசதி படைத்த ஆம்னி பஸ்களின் மூலம் சென்னைக்கு வந்து, இங்கு டெங்குக் காய்ச்சலைப் பரப்புகின்றன'' என்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, "வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு டெங்கு ஒழிக்க ஒத்துழைப்பு தாருங்கள் " என்கிறார்.

'எல்லாமே மக்கள் பார்த்துக்கொண்டால், அமைச்சர் எதற்கு?' எனக் குமுறுகின்றனர் பொதுமக்கள்.


டிரெண்டிங் @ விகடன்