Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருவுற்ற பெண்ணைப் பாடாய்படுத்திய அரசுப் பெண் டாக்டர்! அதிரடி காட்டிய நீதிமன்றம்..!

தவறான சிகிச்சையளித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுப் பெண் டாக்டருக்கும், ஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க மருத்துவ அதிகாரிக்கும் அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் கே.கே.நகரைச்சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருமாள் தாய். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பதறிப்போய் அரியலூா் அழகப்பா நகரில் உள்ள  ஏ.கே.எம்.மருத்துவனை நடத்தி வரும் அரசு மருத்துவர் ஆர்.கே.காஞ்சனாவிடம் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.

அவரைப் பரிசோதித்தப் பிறகு மருத்துவர் காஞ்சனா, வயிற்றில் கரு உருவாகியுள்ளது. நீங்கள் தாயாகப்போகிறீர்கள். இருந்தாலும் கரு கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்றுகூறி மருந்து மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தும் ரத்தப்போக்கு தொடர்ந்துகொண்டே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார் பெருமாள்தாய். மீண்டும் மருத்துவர் காஞ்சனாவை அன்று சந்தித்துக் கேட்டிருக்கிறார்கள். மீண்டும் அவரைப் பரிசோதித்த மருத்துவர் காஞ்சனா, வயிற்றில் கரு சரியாக தரிக்கவில்லை. ஆகவே உடனடியாக கருவைக் கலைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்குப் பெருமாள்தாய் சம்மதம் தெரிவித்ததையடுத்து, மருத்துவர் காஞ்சனா, அறுவை சிகிச்சை மூலம் பெருமாள்தாயின் கருவைக் கலைத்துள்ளார். அவரது சிறுநீர் மற்றும் ரத்தம், சிறிது தசைகளை எடுத்து ஆய்வுக்காகத் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு மருத்துவர் காஞ்சனாவைச் சந்தித்த பெருமாள்தாய்க்கு வலி அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், இனி வலி இருக்காது என்று அதிக பவர்களைக் கொண்ட மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

                  

அந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் நிலை வந்துள்ளது. உடனே திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள்தாய்க்குத் தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டுள்ளது என்றும், அதிக பவர் மருந்துகளை உட்கொண்டதால் வயிற்றிலுள்ள ஒரு குழாய் அழுகிப்போயுள்ளது. உடனே அந்தக் குழாயை அகற்றுமாறும் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இங்கு பார்க்க முடியாது. சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு சொல்லியிருக்கிறார்கள்.

இதையடுத்து பெருமாள்தாயின் கணவர் செந்தில்வேல், மருத்துவர் காஞ்சனாவைச் சந்தித்து, தனது மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அறிக்கைகளைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை எனக் கூறிப் பல நாள்களாக இழுத்தடித்துள்ளார்.மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவுற்ற என் மனைவியின்  கருவைச் சிதைத்துவிட்டார்கள் என்று செந்தில்வேல், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர்வு மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன், தவறான சிகிச்சையளித்த மருத்துவர் காஞ்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சமும், வழக்குத் தொடர்ந்த நாளிலிருந்து தொகை செலுத்தும் தேதிவரை 9 சதவிகித வட்டியுடன் சேர்ந்து நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கில், ஒரு அரசு மருத்துவர் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை கண்காணிக்காத பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நல இணை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.1 லட்சமும், வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து தொகை செலுத்தும் தேதிவரை 9 சதவிகித வட்டியுடன் சேர்த்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement