தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் ஊழல்: ஜி‌.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழக போலீஸுக்கு சமீபத்தில் வாங்கப்பட்ட வாக்கி-டாக்கி விஷயத்தில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி  மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி‌. ராமகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழகத்தில் காவல்துறைக்கு லைசென்ஸ் இல்லாத நிறுவனத்திடமிருந்து, வாக்கி-டாக்கி வாங்கியதில், பெருமளவில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது. 10000 வாக்கி டாக்கி வாங்க 47.56 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், 4000 வாக்கி டாக்கி 83.45 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இதில், பெருமளவிலான ஊழல் முறைகேடு நடந்துள்ளது.

எனவே, டெண்டரை ரத்துசெய்து, இதுகுறித்து பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு சி.பி.ஐ - மற்றும் அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி, சேகர் ரெட்டி வீட்டில் சோதனை, அரவக்குறிச்சி தேர்தலின்போது அன்புநாதன் வீட்டில் சோதனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை என நடத்தி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை, அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திவருகிறது. கல்வித்துறையில் நேர்மையாகவும் ஊழலுக்கு இடம் கொடுக்காமலும் செயல்பட்ட அதிகாரி, இப்போது பணி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது' என்று அவர் தெரிவித்தார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!