'அநாதை', எந்த மொழியிலும் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று சொன்ன பிரதர் தாத்தா மறைந்தார்... சோகத்தில் கிராம மக்கள் | Brother Thatha's demise brings sadness to many villages

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (07/10/2017)

கடைசி தொடர்பு:09:51 (07/10/2017)

'அநாதை', எந்த மொழியிலும் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று சொன்ன பிரதர் தாத்தா மறைந்தார்... சோகத்தில் கிராம மக்கள்

தனி மரம் தோப்பாகாது என்று யார் சொன்னது. மனிதம் மட்டுமே குடிகொண்ட மனிதமனம் நினைத்தால், தனி மரமும் மாபெரும் தோப்பாக முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிம்ப்டன். இங்கிலாந்தில் பிறந்து தமிழகத்தில் வத்தலகுண்டு அருகேயுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தங்கி, தனது சேவையால் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய அந்த சேவை உள்ளம், 5-ம் தேதி தனது துடிப்பை நிறுத்திக்கொண்டது. 92 வயதான கிம்ப்டனின் சேவை மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. ‘நான் கல்லுப்பட்டிக்காரன்’ என தேன்மதுரத் தமிழில் பேசும் ஜேம்ஸ் கிம்ப்டனின் மறைவு, கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைப்போல நினைத்து, இரண்டு கிராமங்களும் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறன. நேற்று மட்டும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த 30,000 பேருக்கு மேல் வந்திருக்கின்றனர். இன்று நடக்க உள்ள அவரது இறுதிச் சடங்கில், இந்த எண்ணிக்கை இன்னும் பல ஆயிரங்கள் அதிகரிக்கும் என்கிறார்கள். இவரால் வளர்க்கப்பட்டு, இன்றைக்கு அரசின் பல உயரிய பதவிகளில் உள்ள பலரும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இத்தனை மக்களின் அன்பைப் பெற அவர் என்ன செய்தார்?

இந்த உலகில், யாரும் அநாதைகள் இல்லை என்பதை வாய் வார்த்தையாகத்தான் பலரும் சொல்வார்கள். ஆனால், அதை உண்மையாக்கிக் காட்டியவர் கிம்ப்டன். ஆதரவற்ற குழந்தைகள் மேம்பாட்டுக்காக ‘ரீச்சிங் தி அன்ரீச்டு’ என்ற சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்கொடுத்தார். அவர்கள் மனதில் தாங்கள் அநாதை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தினார். கணவனால், சமூகத்தால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களை அழைத்துவந்து, அந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்தினார். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று ஆதரவற்ற குழந்தைகளை ஒப்படைத்தார். அதன்மூலம், ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு அம்மா, சில குழந்தைகள் என்ற நிலை உருவானது. ஆதரவற்றவர்கள் ஒன்றிணையும்போது, ஆதரவு தன்னால் வந்துவிடுகிறது. அதன்பிறகு, அங்கு ஆதரவற்றவர்கள் என யாருமே இல்லை. இன்றைக்கும் அந்தக் கிராமத்தில், பல குடியிருப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி என இவரது அருட்பணியால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பலரும் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். இங்கு படித்தவர்களில் கலெக்டர், எஸ்.பி, வங்கி அதிகாரி எனப் பலர் உயரிய பதவிகளில் இருக்கிறார்கள். 

விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக்கொண்ட இந்தப் பகுதியில், இவரது முயற்சியால் பலநூறு ஏக்கர் புன்செய் நிலங்கள், இன்றைக்கு நன்செய் நிலங்களாக மாறியிருக்கின்றன. ஆம், இதுவரை 4,500-க்கும் மேற்பட்ட போர்வெல்களைத் தனது சொந்தச் செலவில் அமைத்துக்  கொடுத்திருக்கிறார். வீடு இல்லாதவர்களுக்கு 8,700 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறார். பள்ளிகள், கிராமங்கள் என இதுவரை 2,400 குடிநீர் அமைப்புகளை அமைத்துக்கொடுத்திருக்கிறார். நூற்றுக்கணக்கான முதியோர்களுக்கு உதவித்தொகையும் வழங்கிவந்தார். ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பணியை, தனியொரு மனிதாகச் செய்த கிம்ப்டன், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென் தமிழகத்து விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகப் பாடுபட்டுள்ளார். அதனால்தான், இவரை ‘பிரதர் தாத்தா’ என மக்கள் அன்போடு அழைத்தனர். வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில், இவரது கால் தடம் பதிக்காத இடமேயில்லை. தனது 85 வயது வரை ஜீப் ஓட்டிக்கொண்டிருந்தார். சிறுநீரகத் தொற்று காரணமாக 5-ம் தேதி இயற்கை எய்தினார் பிரதர் தாத்தா. 

அன்பும், மனிதநேயமும் தேசங்களை, இனங்களை, மொழிகளைக் கடந்தவை என்பதை உணர்த்தும் வகையில் பிரதர் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்த சாரை சாரையாக வந்துகொண்டே இருக்கிறார்கள் மக்கள். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close