வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (07/10/2017)

கடைசி தொடர்பு:12:54 (07/10/2017)

அ.தி.மு.க-வின் எந்த அணியில் துளிர்க்கப்போகிறது இரட்டை இலை?

சசிகலா

இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க-வின் தேர்தல் சின்னமாக அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் எந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. எம்.ஜி.ஆர் . மறைந்தபோதும் இந்தச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 

ஆனால், அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க- அணிக்கு, தமிழக மக்கள் 1989-ம் ஆண்டு தேர்தலில் அதிக வாக்குகளை அளித்ததால், எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ஜானகி, அரசியலை விட்டே விலகுவதாகக் கூறி, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். இதையடுத்து ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு, இரட்டை இலைச் சின்னம் மீட்கப்பட்டது. 1991-ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதா, ஐந்துமுறை முதல்வராகப் பதவியேற்று, கடந்த ஆண்டு டிசம்பரில் மறைந்தார்.

ஆனால், அவரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுகளோ வித்தியாசமான முறையில் உள்ளது. சசிகலா தலைமையை ஏற்காமல் தனியாக ஓ.பன்னீர்செல்வம், பிரிந்ததால் தான் முதல்வராக முடியாத நிலையில் எடப்பாடியை அப்பதவியில் அமர்ந்தினார் சசிகலா. அதற்குள் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். அணிகள் இணையவே, சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தலைமையில் எடப்பாடிக்கு எதிராக மற்றொரு அணி உருவானது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம், அதை எதிர்த்து வழக்கு என அரசியல் களம் அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கிறது. இதற்கிடையே தன் கணவர் நடராசன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், அவரைப் பார்க்க, பெங்களுரு சிறையில் இருந்து சசிகலா ஐந்து நாள்கள் பரோலில் வந்துள்ளார்.

இதுஒருபுறமிருக்க, சசிகலாவுடன் இருந்தபோது, அவருக்கு ஆதரவாக இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அந்த மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறி, புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கால அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு அம்மனுவில் அவர் கோரியுள்ளார். எனினும் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பிக்கவில்லை. சசிகலா பரோலில் சென்னை வந்துள்ள நிலையில், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்; சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இதுவரை இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இரட்டை இலை

1988-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். இறந்தபோது இருந்த நிலைமை வேறு. தொண்டர்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவின் கரீஷ்மாவை ஏற்றுக் கொண்டு, அவரை தங்கள் தலைவியாக அங்கீகரித்தனர். ஆனால், இதுவரை அதுபோன்ற ஒரு தேர்தல் நடைபெறவும் இல்லை. சசிகலா, தினகரனையோ அல்லது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸையோ மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் அ.தி.மு.க-வின் அடுத்த தலைவராக இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி இருப்பதால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போன்ற அரசு விழாக்களை நடத்தி வருகிறார்கள்.

போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை எடப்பாடி இழந்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் இதுவரை பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்று, புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுள்ளார். எனவே, இதுபோன்ற அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கு வழங்கப்படும்? என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பில் கடைநிலை அ.தி.மு.க. தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி, தினகரன் தரப்பினர் பரஸ்பரம் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும் 'தங்களுக்குத் தான் இரட்டை இலைச் சின்னம்' என்று தெரிவித்துள்ளார்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்காக, தமிழகத்தில் உள்ள இதர எதிர்க்கட்சிகளும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வுக்கு எதிராக குறுக்குசால் ஓட்டி வருகின்றன.

எப்படி இருப்பினும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் வெகுவிரைவில் உரிய முடிவை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இரட்டை இலை எந்த அணிக்கு துளிர்க்கும் என்பதை நாமும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்