Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''அமைதி..!’’ சசிகலாவுக்கு வந்த அறிவுரை

சசிகலா

.தி.மு.க-வின் ஓர் அத்தியாயம் ஜெயலலிதா என்றால், ஜெயலலிதாவின் ஓர் அத்தியாயம் சசிகலா. உடன்பிறவாச் சகோதரியாக ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுக்காலம் ஒன்றாகப் பயணித்த சசிகலா, அவருடைய மரணத்துக்குப் பிறகு சில நாள்கள் அரசியலில் தலைதூக்கத் தொடங்கினார். ஆனால், சொத்துக்குவிப்பு மூலம் விளையாடத் தொடங்கிய விதி, அவரைத் தலையெடுக்க விடாமல் சிறைக்கு அனுப்பியது. சிறையில் சசிகலா இருந்தபோதிலும், வெளியில் அவர் ஷாப்பிங் சென்றதாகத் தகவல்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது ஒருபுறம் இருக்க... மறுபுறம், கடந்த மார்ச் மாதம் சசிகலாவின் உறவினர் மகாதேவன் மாரடைப்பால் உயிரிழந்தபோது, சசிகலா பரோலில் செல்ல அனுமதிகோரி கர்நாடக சிறைத் துறையில் மனு அளித்ததாகச் சொல்லப்பட்டதுடன், அது நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. “தண்டனைக் கைதி குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஓராண்டுவரை சிறைத் தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். கைதியின் நெருங்கிய ரத்த உறவுகள் தொடர்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும். கைதியின் சிகிச்சை, தவிர்க்க முடியாத வேலை உள்ளிட்டவைகளுக்காகவும் பரோல் வழங்க‌ப்படும். இந்த வகையில் பரோல் வழங்கும் அளவுக்கு சசிகலாவின் கோரிக்கை நியாயமானதாக இல்லை. அதனால்தான் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்று கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் தரப்பில் அப்போது அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. 

பரோல் எதற்கு?

இந்த நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்திருக்கும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக 15 நாள்கள் பரோல் வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ம் தேதி மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதைச் சரிசெய்து மீண்டும் புதிய மனுவைத் தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, சசிகலாவின் வக்கீல்கள் மீண்டும் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கி, புதிய பரோல் மனுவைச் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சசிகலா ஐந்து நாள்கள் பரோலில் செல்ல அனுமதியளித்தனர். அத்துடன் கடும் நிபந்தனைகளையும் விதித்தனர்.

நிபந்தனைகள்!

நடராசனை மட்டும் சசிகலா சந்திக்கலாம். அதைத் தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்க வேண்டும் என்றால், சிறைத்துறையின் அனுமதிபெற வேண்டும். குறிப்பாக, உறவினர்களைக்கூடச் சசிகலா சந்திக்க வேண்டும் என்றால், அவருடன் வரும் காவலர்களிடம் அனுமதிபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது எனவும் சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஐந்து நாள்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். 

அரசியல் பேசுவாரா?

இதுகுறித்து அவருக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பல முக்கிய முடிவுகளை கிருஷ்ணப்ரியா வீட்டில் இருந்துதான் சசிகலா எடுத்திருக்கிறார். அதனால்தான் அந்த வீட்டையே இப்போதும் அவர் தேர்வு செய்திருக்கிறார். கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் தடையில்லாச் சான்று கேட்ட நேரத்தில்தான், இந்த வீட்டுக்குள் நுழைந்த காவல் துறை அதிகாரிகள் வழக்கமான நடைமுறைதான் என்று சொல்லி, பல கேள்விகளைக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். அதனாலேயே இப்போதும் அந்த வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அங்கு சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் அவர் சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கணவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி சசிகலா இப்போது பரோலில் வந்திருந்தாலும், அவரது கவனம் முழுவதும் கட்சி மீதுதான் உள்ளது."சிறைக்குச் செல்லும் முன்பு, தினகரனை கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்தோம். ஆனால், இப்போது நமது குடும்பமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறது என்று சசிகலா வேதனையில் இருக்கிறார். 'நன்றாக இருந்த கட்சி இப்போது சிதறிக் கிடக்கிறது. நம்மால் அரசியலுக்கு வந்தவர்கள் இன்று நம்மையே தூக்கி எறியும் அளவுக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். ஆட்சியும், கட்சியும் இப்படிப் போனதற்கு என்ன காரணம்... ஏன், தினகரன் மீது பலரும் வெறுப்பில் இருக்கிறார்கள்' ஆகியன பற்றி தமது ஆதரவாளர்களை அழைத்து ரகசியமாக பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், 'இப்போதைக்கு இந்த விவகாரத்தை நானே கவனித்துக் கொள்கிறேன். உங்களுக்கு இதனால் பிரச்னை வந்து விடக்கூடாது. யாரிடமும் நீங்கள் இதுகுறித்து பேச வேண்டாம். அமைதியாக இருங்கள்' என்று தினகரன் சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார். இதனால், இப்போதைக்கு அரசியல் குறித்து எதுவும் பேசாமல் அவர் மெளனமாகவே இருக்கலாம்'' என்றனர் நிதானமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement