வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (07/10/2017)

கடைசி தொடர்பு:12:38 (07/10/2017)

"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா

'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. 

சமந்தா

பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின்  காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் திருமணம் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டுமுறை நடக்க இருக்கிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா-நாகசைதன்யா திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வருகை தந்திருந்தனர். திருமணப் புடவையை நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி நவீன முறையில் வடிவமைத்திருந்தார். 

சமந்தா-நாக சைதன்யா

மேலும், இன்று மாலை கோவாவில், 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அதன்பின், இருவரும் தேன்நிலவுக்கு நியூயார்க் செல்ல இருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என சமந்தா அறிவித்துள்ளார்.