வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (07/10/2017)

கடைசி தொடர்பு:13:19 (07/10/2017)

' தமிழகத்தில் நாம் செய்த தவறு!'   - தமிழிசையிடம் ஆதங்கப்பட்ட அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

மிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து, அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. ' சசிகலா குடும்பத்து ஆதிக்கத்துக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ செய்துவிட்டோம். உத்தரப்பிரதேசத்தில் நாம் செயல்படுத்தியதை குறைந்தபட்ச அளவுகூட நீங்கள் செயல்படுத்தவில்லை' என தமிழிசையிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அருண் ஜெட்லி ' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கடந்த ஓராண்டாக பலவித இன்னல்களை அனுபவித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க அரசு. 'மீண்டும் இரட்டை இலை துளிர்க்குமா?' என்ற சந்தேகம் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலையை வைத்துக்கொண்டு ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டிய ஜாலத்தின் பாதிப்பில் இருந்து பா.ஜ.கவால் மீண்டு வர முடியவில்லை. 'இரட்டை இலையை யார் கையில் கொடுத்தாலும் அதனால் பயனில்லை' என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதையும் அரசியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ' விரைவில் உள்ளாட்சி அல்லது சட்டமன்றத் தேர்தல் வந்தால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கைகளுக்கு இரட்டை இலை கிடைக்கலாம் அல்லது இரட்டை இலை இல்லாவிட்டாலும் ஆளும்கட்சியின் அதிகார பலத்தோடு வெற்றி பெற்றுவிடலாம்' எனவும் பா.ஜ.க நிர்வாகிகள் கணக்குப் போடுகின்றனர். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில், திராவிடக் கட்சிகளின் பிரசாரமும் மத்திய அரசின் செயல்பாடுகளும் தமிழக பா.ஜ.க-வினரை ரொம்பவே சோர்வடைய வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தமிழகக் குளறுபடிகளை விரிவாகவே பட்டியலிட்டிருக்கிறார். ' இனியும் நீங்கள் மெத்தனமாக இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது' எனவும் குறைபட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழிசைபா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததில் அருண் ஜெட்லிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. சேகர் ரெட்டி ரெய்டு முதல் ஆளும்கட்சியின் முக்கிய கஜானாவை நெருங்கியது வரையில் அவருடைய பங்களிப்புதான் அதிகம். இதன் விளைவாகவே அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் பா.ஜ.க-வின் பேச்சுக்குக் கட்டுப்பட்டன. தினகரனும் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், தமிழக சூழலை பா.ஜ.க நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கோபம் அகில இந்திய தலைமைக்கு உள்ளது. இதுகுறித்து தமிழிசையிடம் பேசிய அருண் ஜெட்லி, ' உ.பி-யில் அனுபிரியா படேல் செயல்பட்டதைப் போல நீங்கள் செயல்படவில்லை. முலாயம் சிங்குக்கு எதிராக கடுமையான பிரசாரத்தில் அனுபிரியா ஈடுபட்டார். இத்தனைக்கும் அவர் நமது கூட்டணிக் கட்சியைச் (அப்னா தள் கட்சி) சேர்ந்தவர். ' மண்டல் கமிஷனின் பயன் உ.பி-யில் குறிப்பிட்ட சாதிக்கு மட்டும்தான் பயன் அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முலாயம் அனுபிரியா படேல்குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் எம்.பி-க்களாகவும் இதர அரசுப் பதவிகளிலும் உள்ளனர். அவருடைய சமூகத்தினர் மட்டுமே அதிகளவில் அமைச்சர்களாக உள்ளனர். மற்ற சமூகங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. இப்படியே போனால், முலாயம் சிங்கால் மற்ற சமூகங்களுக்கு நல்லது நடக்கப் போவதில்லை. மோடி வந்தால்தான் சரியாகும்' எனப் பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் நமது வெற்றிக்குக் கை கொடுத்தது. 

இதேபோன்ற சூழல்தான் தமிழகத்திலும் உள்ளது. சசிகலாவுக்கு வேண்டிய சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பலர் எம்.பி-க்களாகவும் இருக்கிறார்கள். இதனால், இதர சமூகங்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்ற பெயரில் இப்படியொரு அநீதி நடந்துகொண்டிருப்பதை சுட்டிக் காட்டும் வகையில் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டோம். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் தவறிவிட்டீர்கள்' என ஆதங்கப்பட்டிருக்கிறார். இதன்பிறகே, நடராசனுக்கு வழங்கப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சந்தேகத்தை எழுப்பினார் தமிழிசை. ' ஜெயலலிதாவுக்கு ஏன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை' எனவும் சுட்டிக் காட்டினார். இனி சசிகலா குடும்பத்துக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த இருக்கிறார் தமிழிசை" என்றார் விரிவாக. 

" பா.ஜ.க தலைமையின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட தினகரனுக்கு வேண்டப்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள், ' மோடிக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம். உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் உடனுக்குடன் தலைமைக்குத் தெரியப்படுத்தப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அ.தி.மு.க ஆதரவு பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசுக்கு ஆதரவான கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ' இதே அணுகுமுறையைக் கடைபிடித்தால்தான் வழக்குகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும். இல்லாவிட்டால் ஃபெரா வழக்குகளை நெருக்கத் தொடங்கிவிடுவார்கள்' எனவும் தினகரன் தரப்புக்கு ஆலோசனை அளித்துள்ளனர்" என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி வட்டாரத்தில்.


டிரெண்டிங் @ விகடன்