வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (07/10/2017)

கடைசி தொடர்பு:16:19 (07/10/2017)

`ஜெயலலிதாவுக்காகச் சிறையில் இருப்பவர் சசிகலா!' - கொந்தளித்த தினகரன்

பழனிசாமியை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஜெயலலிதாவுக்காகச் சிறைச்சாலையில் இருக்கின்றவரை ஒரு தேச துரோகியைப் போல சித்தரிக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் ஆவேசமாகக் கூறினார்.

பரோலில் வந்துள்ள சசிகலா தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் முன்பு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

சசிகலாவுக்குக் கடுமையான நிபந்தனை விதிக்கக் காரணம் என்ன?

கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா எதற்காக சென்னை வந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். சசிகலாவின் கணவர் நடராசனுக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, கல்லீரல், சீறுநீரகம் பாதிக்கப்பட்டு 30 நாள்களாகக் காத்திருந்து, அவருக்கு தெய்வத்தின்  அருளால் கல்லீரல் கிடைத்து அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது உடல்நிலை தேறிவருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சசிகலா வரவேண்டும் என்று உறவினர்களும் நண்பர்களும் விரும்பினர். இதற்காகக் கடந்த 28-ம் தேதியே பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பம் கொடுத்தார். போதுமான ஆவணங்கள் கொடுத்தாலும் காலம் தாழ்த்தப்பட்டு நேற்றிரவுதான் அவருக்குப் பரோல் கிடைத்தது. எங்களது வழக்கறிஞர் அசோகனிடம், சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தவுடன், "எந்தக் காவலர்களும் தேவையில்லை. அவருக்கு நீங்கள் யாராவது ஜாமீன் கொடுத்துவிட்டு அவரை விமானத்திலோ காரிலோ அழைத்துச் செல்லலாம்" என்று கூறினார்கள். வழக்கறிஞர் அசோகனே சசிகலாவுக்கு ஜாமீன் பத்திரம் கொடுத்தார். நாங்கள் 15 நாள்கள் கேட்டோம். அப்போது, சிறைத்துறையினர், "அதை நாங்கள் முடிவு செய்து சொல்கிறோம். அவர் உங்களுடன் வரலாம். உறவினர்கள் வந்து அழைத்துச் செல்லலாம்" என்று கூறினர்.

சென்னையில் அவர் எங்கு தங்குவார். அவர் கணவர் இருக்கிற மருத்துவமனை உள்ளிட்ட தகவல்களை கர்நாடக சிறைத்துறையினர் சென்னை காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். சென்னை காவல்துறை ஆணையரிடம் சொல்லி, சசிகலா எங்கு தங்குவார்களோ அந்த இடத்தையும் மருத்துவமனை இருக்கும் இடத்தையும், ஜாமீன் கொடுத்த வழக்கறிஞர் அசோகனின் முகவரியையும் சரிபார்த்து கொடுக்கும்படிதான் சொன்னார்கள். ஆனால், சசிகலா சென்னைக்குவர வேண்டுமென்றால் அங்கு சட்டம்- ஒழுங்க பிரச்னை ஏற்படும். அவரை இங்கே அனுமதிக்க வேண்டுமென்றால் நிபந்தனைகள் போட வேண்டும் என்று தமிழகக் காவல்துறை கூறியுள்ளது. அதில், "சசிகலா எங்கு தங்குகிறாரோ அந்த வீட்டை விட்டு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். மற்றப்படி வீட்டில்தான் இருக்க வேண்டும். யாரையும் அவர் பார்க்கக் கூடாது. ஊடகங்களைச் சந்திக்கக் கூடாது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் கூறினார்கள்". ஆனால், கர்நாடக சிறைத்துறையோ, "சசிகலாவின் சகோதரின் மனைவி இறப்புகுறித்து துக்கம் விசாரிக்க செல்லலாம். அவர் எங்கும் தங்கலாம். அவரது நிரந்தர முகவரி 33 ஆண்டுகளாக வசிக்கிற போயஸ் கார்டனில்கூட அவர் தங்கிக்கொள்ளலாம்" என்று கூறினார்கள். ஆனால், இதைக்கேட்டு இங்கிருக்கிற நமது அண்ணன் பழனிசாமி தலைமையிலான இந்த தியாக அரசு. துரோக அரசு என்றால் எல்லாேரும் கோபித்துக்கொள்கிறார்கள்.

"நாங்கள் துரோகிகள் கிடையாது; நாங்கள் தியாகிகள் என்கிறார்கள். ஆட்சியில் பதவியை அனுபவித்துக்கொள்வதை அவர்கள் தியாகம் என்று கூறுகிறார்கள். இவர்களை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஜெயலலிதாவுக்காகச் சிறைச்சாலையில் இருக்கின்ற சசிகலாவை ஒரு தேச துரோகியைப் போல சித்தரிக்கிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில் அவர் தங்கக் கூடாது. அங்கு தங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறார்கள். இது எப்படி நியாயமாகும். உண்மையில் சசிகலா போயஸ் கார்டனில் தங்குவதாகவேயில்லை. அவர் தி.நகர் முகவரில்தான் தங்குவதாகயிருந்தார். ஆனால் இவர்களுக்குச் சந்தேகம், எங்கே அவர் போயஸ் கார்டனில் போய் தங்கிவிடுவாரோ என்ற பயத்தில் பரோல் கிடைக்க தாமதமானதற்கு பழனிசாமி அரசுதான் காரணம். அவரை முதல்வராக்கிவிட்டு சசிகலா பெங்களூரு சிறைச்சாலைக்குச் சென்றவர். அவர் எந்த பாவமும் அறியாதவர். பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்த ஒரே பாவத்துக்காக ஒரே துரோகத்துக்காக இன்றைக்கு சசிகலா ஒரு சிறைக்கைதி போல இருக்கிறார்.

புதிய ஆளுநரைச் சந்திப்பீர்களா?

ஏற்கெனவே இருந்த ஆளுநரைச் சந்தித்துவிட்டு ஏமாந்துவிட்டோம். தற்போது நாங்கள் நீதிமன்றம் சென்றுவிட்டோம். நீதிகிடைக்கும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். ஏற்கெனவே இருந்த ஆளுநரிடம் நியாயம் கிடைக்கவில்லை. புதிய ஆளுநரிடம் நியாயம் கிடைக்குமென்று தெரியவில்லை. யாரால் முதல்வரானோமோ யாரால் அமைச்சர்களாக நீடிக்கிறோமோ அந்தப் பொதுச் செயலாளருக்கே துரோகம் செய்த இந்த துரோக ஆட்சி இன்றைக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற எந்தவொரு விஷயத்திலும் சரியான நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்குத் திறமையில்லாத இந்த ஆட்சி, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற இந்த ஆட்சி நிச்சம் நீதிதேவதையின் ஆசியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும். மீண்டும் நடைபெறவிருக்கிற தேர்தலிலே எங்களது அணி வெற்றிப்பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

அமைச்சர்கள் சசிகலாவைச் சந்திப்பார்களா?

உறவினர்கள் தவிர யாரும் சந்திக்க முடியாத நிலையில் எப்படி சிலீப்பர் செல்லில் இருப்பவர்கள் சந்திப்பது. வரும்போது எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்து சொல்ல முடியாது. அவர்கள் சந்தித்துவிடக் கூடாது. அப்படிச் சந்தித்தால் அரசியல் மாற்றம் உருவாகிவிடும் என்பதற்காகத்தான் இங்கு காவல்துறையைப் பயன்படுத்தி இத்தனை அடக்குமுறையை ஏவிவிட்டார்கள்.