'கணவரைக் காப்பாற்றிக் கொடுங்கள்' - மருத்துவர்களிடம் கைகூப்பிய சசிகலா

சசிகலா

கணவர் நடராசனின் உடல்நிலை குறித்து சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடம் விசாரித்த சசிகலா, ''அவர் எப்போது வீடு திரும்புவார். உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்'' என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். 

அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் கல்லீரலும் சிறுநீரகமும் முற்றிலும் பழுதடைந்து செயலிழந்துவிட்டது என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. மாற்றுச் சிறுநீரகம், கல்லீரல் பொருத்தினால் மட்டுமே நடராசனைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, கல்லீரலையும் சிறுநீரகத்தையும் தானம் பெறும் சட்ட நடவடிக்கைகளை நடராசன் குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் கார்த்திக்கின் சிறுநீரகம், கல்லீரல் தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் நடராசனுக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக அந்த வாலிபரின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நடராசனை மருத்துவர்கள் கவனித்துவருகிறார்கள்.

''அக்டோபர் 4-ம் தேதி இரண்டு உறுப்புகளும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுவிட்டது. நடராசன் நலமுடன் உள்ளார். உடல் நிலை தேறி வருகிறார். கல்லீரலும் கிட்னியும் நன்றாகச் செயல்படுகிறது'' என்று கல்லீரல் நோய் மற்றும்  உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை துறையின் இயக்குநர் டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு சிறையிலிருந்து பரோலில் சென்னை வந்துள்ள சசிகலா இன்று மதியம் 12 மணிக்கு குளோபல் மருத்துவமனைக்கு வந்து நடராசனை பார்த்தார். 2 மணி நேரம் நடராசன் அருகில் இருந்து கவனித்தார். நடராசனைப் பார்க்க சசிகலா வருகிறார் என்பதால் இன்று காலையில் நடராசனுக்கு முகச்சவரம் செய்யப்பட்டது.

சசிகலா

நடராசனுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் சசிகலா கேட்டறிந்தார். ''இன்னும் 10 நாளில் சாதாரண வார்டுக்கு நடராசன் மாற்றப்படுவார். அங்கு 10 நாள்கள் இருக்க வேண்டும். பிறகு, மூன்று மாதம் வீட்டில் தீவிர ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு அவர் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். கல்லீரலும் சிறுநீரகமும் நல்ல முறையில் வேலை செய்கிறது. பயப்பட வேண்டாம்'' என்று மருத்துவர்கள், சசிகலாவிடம் தெரிவித்தனர். அப்போது, மருத்துவர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட சசிகலா, ''நான் என் கணவரை அருகில் இருந்து கவனிக்க முடியாத நிலை உள்ளது. அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்ததுக்கு நன்றி. அவர் உயிரைக் காப்பாற்றிக்கொடுங்கள். அவர் எப்போது வீடு திரும்புவார்'' என்று உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, நடராசன், ''நான் நலமாக இருக்கிறேன். நீ தைரியமாக இரு'' என்று கூறினார். அதன் பின்னர், முதல் மாடியிலிருந்து லிஃப்ட்  வழியாகக் கீழே இறங்கிய சசிகலாவைப் பார்த்து அந்த வாசல் அருகில் நின்ற நாஞ்சில் சம்பத், விஜிலா சந்தியானந்த், தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் கும்பிட்டு வணக்கம் வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடியே காரில் ஏறிய சசிகலா, தி.நகர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். 

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!