Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`எடப்பாடி பழனிசாமியை ஏன் எதிர்க்கிறார் பொன்னார்?' - கலகலக்க வைத்த 'நமது எம்.ஜி.ஆர்'

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர், ஐந்து நாள் பரோல் மூலம் வெளியே வந்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. 


தன் கணவர் நடராசனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடந்துள்ள நிலையில், அவரைப் பார்ப்பதற்காக பரோலில் சசிகலா வெளியே வந்திருந்தாலும், அடுத்த 5 நாளில் தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து கட்சியைத் திரும்பவும் கைப்பற்ற அவர் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் மீண்டுமொரு பரபரப்பானக்கட்டத்தை எட்டியுள்ளது. 

எதிர்க்கட்சிகளைவிட ஆளுங்கட்சியினரே சசிகலா குடும்பத்தின் ஒவ்வோர் அசைவையும் கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். சசிகலா ஆதரவு அ.தி.முக-வினருக்கு அவரின் பரோல் விடுப்பு சற்று உற்சாகத்தைத் தந்திருந்தாலும், மறுபக்கம் தமிழக அரசு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்மீது பழைய வழக்குகளைத் தூசித்தட்டி ஏவிவிடுவது தலைவலியைக் கொடுத்துள்ளது. இதன் நீட்சியாகத்தான் தினகரன்மீது சில நாள்களுக்கு முன்னால் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆரில்’, பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாடு தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.  

கடந்த மாதம் பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட தினகரன் அணி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிக்கப்பட்டன. அதில், நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தி, வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ‘கட்சியில் களையெடுப்பு தொடரும்’ என்றும் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, அரசை அவமதிக்கும் வகையில், சேலத்தில் நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரனால் நியமிக்கப்பட்ட சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 14 பேர்மீது சேலம் போலீஸார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

இப்படி உள்கட்சிக் குழப்பம் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில்தான் அ.தி.மு.க அம்மா அணியின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ‘தரைதட்டிய கப்பல்’ என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை பிரசுரமாகியுள்ளது. அதில், ‘2016 சட்டமன்றத் தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தில் அம்மா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தற்போதைய ஆளும் தரப்பினர் தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள். இரட்டை இலைச் சின்னத்தையே முடக்கியவர்களுடன் கைகோத்து துரோகம் செய்யும் ஆளும் தரப்பினர், அம்மாவின் வாக்குறுதிகளைத் தூக்கி எறிந்ததில் எந்த வியப்பும் இல்லைதான். அம்மா அறிவித்த திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு கறவை மாடு- ஆடுகள், பணிக்குச் செல்லும் மகளிர்க்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்களையெல்லாம் மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக, டீ கடையின் வாசலில் யார் நிற்கிறார்கள், யார் டீ குடிக்கிறார்கள், துண்டுப் பிரசுரத்தை யார் விநியோகிக்கிறார்கள்… என்று தேடிப்பிடித்து பொய் வழக்குப் போடுவதில் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது, ஊழல் மலிந்துவிட்டது, நிர்வாகம் சீர்கெட்டுப் போயுள்ளது என்று சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இரட்டை இலைச் சின்னத்தை வைத்து தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இன்று எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு ஆட்சி நடத்துகிறார்கள் என்று ஊரே காறித் துப்புகிறது! முதலமைச்சர் பங்குகொள்ளும் நூற்றாண்டு விழாக்களைப் பொதுமக்கள் புறக்கணித்து வருவதும், அதனால் நீதிமன்ற உத்தரவையும் அவமதித்து மாணவ- மாணவிகளைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவதையும் ஊடகங்கள் மட்டுமல்லாது, மத்திய அரசின் உளவுத்துறையும் கூர்ந்து கவனித்து வருகிறது. வேலூர் மாநாடாக இருந்தாலும் சரி, நீட் விவகாரமாக இருந்தாலும் சரி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் பங்குபெறும் கூட்டங்களில் அலைமோதும் சுனாமி போன்ற மக்கள் வெள்ளத்தைக் கண்டு இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சியினரும் அசந்துபோயிருக்கிறார்கள். 

இவற்றையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய உளவுத்துறையானது பன்னீர்- எடப்பாடி அணிக்குப் பொதுமக்கள் வரவேற்பு இல்லை என்றும், மேலும் மக்களின் அமோக ஆதரவையும் வரவேற்பையும் டி.டி.வி.தினகரன் பெற்று வருகிறார் என்றும், அதனால் வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் துணையுடன் தமிழகத்தில் தேர்தலை பி.ஜே.பி சந்தித்தால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் உளவுத்துறை மத்திய பா.ஜ.க மேலிடத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாகச் செய்திகள் கசிந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடப்பாடி அரசுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். 

தமிழ்நாட்டில் தற்போது தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் மோடி  முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பி.ஜே.பி.யினர் மீது தேசத்துரோகச் சட்டத்தை ஏவி கொடுமைப்படுத்துகிறார்கள், அதை நிறுத்த வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி  கோரிக்கை விடுத்ததை இப்போது நினைவுகூர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆக, தேசத்துரோகச் சட்டத்தை எந்த மாநில அரசு துஷ்பிரயோகம் செய்தாலும் அதை தற்போதைய பிரதமர் மோடி எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தகுந்த ஆதாரமின்றி கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில், தன்னை ஆதரிக்கவில்லை என்பதால், கழகத் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது எடப்பாடி அரசு பொய் வழக்கை போட்டுள்ளது' என்று அக்கட்டுரையில் முழுக்க முழுக்க பா.ஜ.க சார்பான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.


ஓ.பன்னீர்செல்வம்,  முதன்முறையாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பின்னர், பா.ஜ.க.வைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தது நமது எம்.ஜி.ஆர் நாளிதழ். ஆனால், எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பின்னர் மத்திய அரசை விமர்சிப்பதை தவிர்த்து வந்தது. தினகரன் இன்னும் ஒருபடி மேலே போய், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்துக்கு தானாக முன் வந்து ஆதரவு தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்னர் ‘காவி அடி, கழகத்தை அழி’ என்று பா.ஜ.க.வை தாக்கி கவிதை ஒன்று நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்தது. தினகரன், இதை சரியாக பயன்படுத்தி பா.ஜ.க-விடம் நல்ல பெயர் வாங்க, நமது எம்.ஜி.ஆரின் ஆசிரியராக கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இருந்த மருது அழகுராஜை, ‘கறுப்பு ஆடு’ என்று விமர்சித்து பொறுப்பிலிருந்து தூக்கி அடித்தார். மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நமது எம்.ஜி.ஆரில் முழுக்க பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement