கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் வங்கி அதிகாரிகள்! ரெப்கோ கூட்டத்தில் சலசலப்பு

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் உயரதிகாரிகள் கோடிக்கணக்கில் வருமானம் பெறுவதாகப் பொதுக்குழு கூட்டத்தில் இயக்குநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 17-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் நிறுவனத்தின் அமைப்பாளரும் முன்னாள் இயக்குநருமான திருவேங்கடம் பேசுகையில், "பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்காகத் தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டுக்கடன் வழங்குவது, தாயகம் திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது என்று வரையறை செய்தோம். ஆனால், அதன்படி நிறுவனம் செயல்படவில்லை. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ஓய்வுபெற்ற குறிப்பிட்ட ஒரு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வு இல்லமாகப் பயன்படுகிறது. தாயகம் திரும்பியோர்களும் ரெப்கோ வங்கி ஊழியர்களும் இந்த நிறுவனத்தால் எந்தப்பயனும் அடைய முடியவில்லை.

தென்னிந்தியாவில் சுமார் 30 லட்சம் தாயகம் திரும்பிய மக்கள் வாழ்கின்றனர். அதில் சுமார் 30,000 மலையகத் தமிழர்கள் 10 X 10 அடி அளவுள்ள கூடாரங்களில் தமிழகத்தில் நாடில்லாமலும் வீடுகளில்லாமலும் உள்ளனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் ரெப்கோ ஹோம் பைனான்ஸுக்கு இல்லை. ஆனால், அதே நேரத்தில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் கோடிக்கணக்கில் வருமானம் பெறுகிறார்கள். குறிப்பாக ஓர் உயரதிகாரி, 2015-ம் ஆண்டு 1.86 கோடியும் 2016-ம் ஆண்டில் 1.76 கோடியும் ஆண்டு வருமானம் பெற்றுள்ளார். அதுத்தவிர மற்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. 64 வயதுக்கு மேலாகியும் பணியில் தொடரும் நிலை உள்ளது. நிறுவனத்தில் மூன்று உயரதிகாரிகளுக்கு மட்டும் மூன்று கோடிக்கு மேல் சம்பளம் மற்றும் படிகள் (remuneration) வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஊழியர் பங்கு ஒதுக்கீடு திட்டத்தில் 3 கோடி வருமானம் பெற்றுள்ளனர்.

ஊழியர் பங்கு ஒதுக்கீடு திட்டத்தின் (ESOP) முறைகேடுகளுக்காக இந்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கும் பதிவு செய்துள்ளது. மேலும், மறுவாழ்வு பணி முறையாக நடைபெற தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை செயலாளர் இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் அந்தப் பதவியிலிருந்து செயலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குத் தொகையில் 51 சதவிகிதம் ரெப்கோ வங்கியிடம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது, அதன் பங்கு 38 சதவிகிதமாகக் குறைந்துள்ளது" என்றார் காட்டமாக.

பொதுக்குழுக் கூட்டத்தில் திருவேங்கடத்தின் இந்தப் பேச்சு, ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!