புதுச்சேரி அரசை உடனே முடக்க வேண்டும்- அ.தி.மு.க எம்.எல்.ஏ காட்டம்

”புதுச்சேரியில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒரு குழுவை அனுப்ப வேண்டும்” என்று புதுச்சேரி அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன், “டெங்குக் காய்ச்சலைத் தடுக்க மாநில அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் குழு மூலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. 10 படுக்கைகள் இருக்கின்ற ஒரு வார்டில் 52 நோயாளிகளும், 24 படுக்கைகள் இருக்கின்ற வார்டில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் உள்ளனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிப்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. மருத்துவமனை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது மற்றும் அவர்களின் அலட்சியம்தான் இந்த அவல நிலைக்குக் காரணம். ஆளுநர் கிரண்பேடி குறை சொல்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுகின்றார். நோயாளிகளைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் அதிகாரப் போட்டியால்  தற்போது பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது புதுச்சேரிக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் தினந்தோறும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தோடு தங்களது பணியைத் தொடரக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆளுநர், முதலமைச்சரின் அதிகார போட்டியாலும், ஆளுநரின் மிரட்டல் போக்காலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களைப் பணியிலிருந்து விடுவிக்க தலைமை செயலருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். புதுச்சேரியில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒரு குழுவை புதுவைக்கு அனுப்ப வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற்று தற்போது உள்ள ஆட்சியை 6 மாதத்திற்கு முடக்க வேண்டும். அமைச்சர் கந்தசாமி மீதான புகார் தன்னிடம் இருப்பதாகவும், அது தொடர்பாக பேச மொழிபெயர்ப்பாளராக அவரது மகனை அழைத்துக்கொண்டு  தன்னைச் சந்திக்க வருமாறும் ஆளுநர் அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தப் புகாரை சிபிஐக்கு அனுப்புவதற்கு முன் தன்னை வந்து சந்திக்குமாறு  கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. தினந்தோறும் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டுவது சரியானது அல்ல'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!