வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/10/2017)

கடைசி தொடர்பு:19:15 (07/10/2017)

அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி குறித்த செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்த வகுப்புகளும் எடுக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஸ்ரீசத்ய சாயி சேவை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர், “இயற்கை பேரிடர் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. நமது மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களை அழைத்துவந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்துகொடுப்பது மேலும், மழைக்காலங்களில் ஓடை, கண்மாய் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுப்பது போன்றவற்றிற்கு இந்தப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அவசியமாகும். இதன் மூலம். பேரிடர் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற இந்தப் பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.” என்றார்.

மலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் அதிகமாகப் பொழியும் என்று மாவட்ட கலெக்டர் முன்னரே எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்றைய பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக மாவட்டத்தில் எங்கெங்கு மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கண்டறிந்து அப்பகுதி மக்களுக்கும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.