வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (07/10/2017)

கடைசி தொடர்பு:20:03 (07/10/2017)

''வாக்கி - டாக்கி டெண்டர் ஊழல்... சி.பி.ஐ. விசாரணை கோர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது!'' வழக்கறிஞர் பாலு


வாக்கி-டாக்கி ஊழலைச் சொன்ன நிரஞ்சன்மார்டி''காவல் துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கியதில் நடந்துள்ள ஊழலை, சி.பி.ஐ. விசாரிக்கும்படி உத்தரவிட ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது'' என்கிறார் வழக்கறிஞர் பாலு. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், இந்த ஊழலைச் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறைக்கு வாக்கி - டாக்கி  வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பிற அரசியல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன்மார்டி, நேற்றுவரை மாநில முதல்வரின் நிழலாக வர்ணிக்கப்பட்டவர். ''தமிழ்நாடு காவல் துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கிட நடைபெற்ற டெண்டரில், பலகோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது'' என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளவரும் அவரேதான்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன், முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பி.ஜே.பி., நீட், ஜல்லிக்கட்டு, மீத்தேன், பான்குட்கா என்று இதுவரையில்  பத்து விஷயங்களை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தது தமிழ்நாடு. பதினொன்றாவதாக இப்போது வந்திருப்பது வாக்கி -டாக்கி வாங்கியதில் மோசடி என்கிற விவகாரம். ஒரு விவகாரத்தில் தீர்வு காண்பதற்குள், அதைவிட இன்னொரு பெரிய விவகாரம் பின்னாலேயே வந்துவிடுவதால் பழைய விவகாரங்கள் அமுங்கிப்போவது மட்டுமே தமிழகத்தில் எப்போதும் நிலைத்து நிற்கிறது.

நிரஞ்சன்மார்டி கடிதம்! 
 "தமிழகக் காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்க விடப்பட்ட டெண்டரில் 11 விதிமீறல்கள் இருக்கின்றன. வாக்கி - டாக்கிக்கு 28 சதவிகிதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி சட்டம் அமலான பிறகு 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அந்தக் கம்பெனிக்கு 28 சதவிகிதமாகக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது,  88 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டது எப்படி? 88 கோடி ரூபாய் டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில், அந்த  ஒரே நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது எப்படி... எந்த விதி அதை அனுமதிக்கிறது?"  -இவைதான் அதிகார மையத்தை ஊமையாக்கி வைத்துள்ள நிரஞ்சன் மார்டியின் கடிதத்தின் முக்கிய வரிகள்.            

''சுதந்திரமான விசாரணை வேண்டும்!'' 
இதுதொடர்பாகத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 'தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஆளுநர் இதுபோன்று கூறியிருக்கிற நிலையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பணிகளுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மிக முக்கியமான தொடர்பு சாதனமாகத் திகழும் 'வாக்கி - டாக்கி' கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. செய்திகள் வெளிவந்து மூன்று தினங்கள் கடந்தும், இதுவரை காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து, 'குட்கா'வில் தொடர்புடைய அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுத்ததுபோல், இப்போது 'வாக்கி -டாக்கி' முறைகேடுகளையும் போர்வைபோட்டு மூடப் பார்ப்பது வேதனைக்குரியது. இந்த முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பது எதிர்க் கட்சிகள் அல்ல, மாநில உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி. அவர் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெண்டர் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, அதன் நகலை முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியிருக்கிறார். இப்படி, மக்களின் பாதுகாப்புக்காக வாங்கப்படும் 'வாக்கி - டாக்கி' கொள்முதல் டெண்டர் முறைகேடுகளுக்குக் காரணமான டி.ஜி.பி-யைப் பாதுகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி துடிப்பது ஏன்? 
இந்த மெகா முறைகேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யும், மாநில உளவுத்துறை ஐ.ஜி-யும் 'கூட்டணி' அமைத்து, ஊழலைத் தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்றவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கைவைத்து வருவதாகவும் தெரியவருகிறது. இந்த முறைகேடு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

 ''முதற்கட்ட ஆதாரம்!'' 
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''2017-18-ம் ஆண்டில் காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 47.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக்கொண்டு 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக  83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4,000 வாக்கி - டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வாக்கி - டாக்கி 47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் அதிகமாக ஒரு வாக்கி - டாக்கி 2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்குநரிடம் விளக்கம் கேட்டு மாநில உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருப்பதுதான் இதில் ஊழல் நடந்திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரம் ஆகும். எனவே, காவல் துறைக்கு வாக்கி - டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

''உரிய விசாரணை நடத்த வேண்டும்!''
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி‌.ராமகிருஷ்ணன், "தமிழகத்தில் காவல் துறைக்கு லைசென்ஸ் இல்லாத நிறுவனத்திடம், வாக்கி - டாக்கி வாங்கியதில், பெருமளவில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது. எனவே, டெண்டரை ரத்துசெய்து, பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உரிய  விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

 ''முடிவெடுக்க ஆளுநரால் முடியும்!''
இதுகுறித்து பா.ம.க. வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் கே.பாலு கூறும்போது, ''இதுபோன்ற சூழ்நிலையில், 'கவுன்சில் ஆஃப் லா'-வின்படியே ஓர் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்கிறது அரசமைப்புச் சட்டம். அதாவது, அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பதே அது. அதே சட்டத்தில்தான், 'ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை' என்று  குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் கடிதம் கொடுக்க அதிகாரம் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 'தமிழக அரசாங்கம், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தனக்கு மனநிறைவு இல்லை என்பதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட பரிந்துரை செய்கிறேன்' என்று ஆளுநரால் கடிதம் எழுதவோ, சொல்லவோ அவருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் அரசு சிறப்பாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் முழு அதிகாரம் பெற்றவர் ஆளுநர்" என்றார் மிகத் தெளிவாக. ஆளுநர் சொல்வாரா, 'ஆள்பவர்' சொல்வாரா என்பது இனிமேல்தான் தெரியும்?
 


டிரெண்டிங் @ விகடன்