வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (07/10/2017)

கடைசி தொடர்பு:19:35 (07/10/2017)

மூத்திர சந்தில் இயங்கும் நூலகம்! வசதி இருந்தும் சாஸ்திரம் பார்த்து அலட்சியம்காட்டும் அதிகாரிகள்! 

 

நூலகம்

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில் இயங்கிவரும் அரசு நூலகம் கக்கன் காலத்திலிருந்து செயல்பட்டுவருகிறது. தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்துவருகிறது. இதை மாற்றக்கோரி சமூல ஆர்வலர்கள் குரல் கொடுத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. கடந்த 2010-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் போடப்பட்டு நீதிபதிகள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிட்டனர். இருந்தபோதிலும் கட்டடத்துக்கு இடம் ஒதுக்குவது, பணம் ஒதுக்குவது என்று பல சிக்கல்கள் ஏற்பட்டன.

ஒருவழியாக மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தைச் சுத்தம் செய்யப்பட்டு அடுக்குமாடியுடன் கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டட வேலைப்பாடுகள் முடிந்தபோதும், இதை யார் திறந்துவைப்பது என்ற சாஸ்திரத்தைக் காரணம் காட்டி கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது . தற்போது இயங்கிவரும் தனியார் கட்டட நூலகமோ கைபிடிச் சுவர் இடிந்து பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது மாற்றுத்திறனாளிகள் இந்தப் படியில் வந்து போவது சர்கஸ் சாதனைபோல் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த நூலகம் செல்லும் வழியோ சிறுநீர் கழிக்கும் சந்தாக மாறியுள்ளது. அதனால், அவ்வழியாக நூலகத்துக்கு வரும் வாசகரோ முகம் சுழித்துக்கொண்டு பலரும் அந்த நூலகத்துக்குச் செல்லாமல் திரும்புவது வேதனையளிக்கிறது .

நூலகம்

இதுதொடர்பாக நூலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் விசாரித்தோம். "புதிய கட்டடத்தின் நூலக சாவியை சில மாதங்களுக்கு முன்தான் பெற்றோம் .கட்டடத் திறப்பு தொடர்பாக மதுரை மாவட்டத் தலைமை நூலகத்திலிருந்து அரசுக்குப் பரிந்துரை செய்துவிட்டார்கள். விரைவாகப் புதிய கட்டடத்தைத் திறக்க ஏற்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. தற்போது நூலகமாகச் செயல்படும் கட்டடத்தைக் காலி செய்ய உரிமையாளர் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார். புதிய கட்டடத்தில் நூலகத்தைச் செயல்படுத்த நீதிமன்றம் 7 ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நூலகம் திறக்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.