வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/10/2017)

கடைசி தொடர்பு:20:00 (07/10/2017)

எல்லா நாமங்களையும்விட உயர்ந்த திருநாமம் எது?

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது காக்கும் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் திருநாமங்களால் அழைத்துப் பாடும் பாடல். கங்கையின் மைந்தர் பீஷ்மர் தனது மரணப்படுக்கையில் இருக்கும்போது இந்தப் பாடலைப் பாடியே உயிரை விட்டார். பீஷ்மர் இந்தப் பாடலை இயற்றியவர். விஷ்ணு பகவானை ஆயிரம் திருநாமம் சொல்லி வேண்டினால் பகவான் மகிழ்வார். இதனால் வேண்டியவர் குலம் தழைத்து எல்லா வளங்களையும் பெறுவார்கள் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் சிறப்பு. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஞானியர்களாலும், பண்டிதர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டு பாடப்பட்டு வந்த காலத்தில் திருமகளுக்கு ஒரு சந்தேகம் வந்தது. உடனே ஸ்ரீமன் நாராயணனிடம் அது குறித்து கேட்டாள். 'பிரபோ, படித்தவரும், யோகியாரும் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடி தங்கள் அருளைப் பெறலாம். ஆனால், படிக்காத பாமர மனிதர்கள் என்ன சொல்லி உங்கள் அருளைப் பெறலாம்? இது தவறல்லவா?' என்று கேட்டாள்.

திருநாமம்

ஸ்ரீமன் நாராயணனும் சிரித்தபடி, தேவி எல்லா திருநாமங்களும் என்னையே குறிக்கும் என்பது உனக்குத் தெரியாததா? எனது நாமங்களில் உயர்ந்ததான "ராம' என்ற ஒரே ஒரு பெயரைச் சொன்னால் போதாதா? ராம நாமம் அறியாமல் 'மரா, மரா' என்று சொன்ன கள்வனே வால்மீகியாக மாறவில்லையா?

ராம நாமம்

அத்தனை ஏன்? ராமனாக அவதரித்த நானே பாலம் கட்டித்தான் இலங்கைக்குச் சென்றேன். ராம நாமம் சொன்ன ஹனுமனோ பறந்து செல்லவில்லையா? ராம நாமம், ராமனை விட சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளவில்லையா? என்று விஷ்ணு பகவான் கேட்க, திருமகள் புரிந்து கொண்டதன் அடையாளமாக நகைத்துக் கொண்டாள். ராம நாமம் எல்லா நாமங்களையும் விட உயர்ந்தது..அதை நாளும் உச்சரித்து நலம் பெறுவோம்.